கோவை செய்தியாளர்களின் கேள்விகளால் கொந்தளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”திமுக ஏஜெண்டா? என்னை புண்படுத்தனும்னே கேள்வி கேட்குறீங்க.. மனசாட்சியே இல்லையா? திரும்ப திரும்ப ஏன் அந்த கேள்வியையே கேட்குறீங்க?” என கொந்தளித்து விட்டார்.
கோவை விமான நிலையத்தில் கடந்த நவம்பர் 18-ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ, வாச்சாத்தி வழக்கில் செங்கோட்டையன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியால் ஆவேசமடைந்தார். மேலும், “நீங்கள் திமுக ஏஜெண்ட். திமுகவைச் சொன்னால் உங்களுக்கு ஏன் எரிகிறது? திமுகவுக்குப் பல்லக்குத் தூக்காதீர்கள்” என்று பேசியது சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து இன்று கோவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் பார்த்திபனை தாம் திட்டியதாக ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுவதாக வைகோ குற்றம் சாட்டினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த செய்தியாளர்கள், “நீங்கள் அமைச்சர் பார்த்திபனை கை நீட்டி பேசுகிற வீடியோ பதிவு இருக்கிறதே?” என்றனர்.
இதனால் கோபமடைந்த வைகோ, “ஏய்யா.. நான் பேசுறப்ப குறுக்கே பேசுவியா? யோவ்.. நீ குறுக்கே பேசுவியா? சொன்னா கேளு..”ன்னு கோபப்பட்டார். அத்துடன், “மிஸ்டர் நீங்க எந்த பத்திரிகை” எனவும் ஆவேசத்துடன் வைகோ கேள்வி கேட்டார்.
அதேநேரத்தில் மற்ற செய்தியாளர்கள், “நீங்க அமைச்சரை கை நீட்டி பேசுகிற வீடியோ இருக்கும் போது பத்திரிகைகள் பொய் சொல்வதாக எப்படி சொல்லலாம்” என குறுக்கிட்டு கேட்டனர். ஆனால் வைகோவோ, “நீங்க திட்டமிட்டு திமுகவின் ஏஜெண்டாக வந்து இருக்கீங்க..ன்னு குற்றம் சாட்டினார்.
அத்துடன், “எப்படியும் பத்திரிகைகளில் வைகோ கோவையில் ஆவேசம், வைகோ கோபப்பட்டார்”ன்னு போடப் போறீங்க.. I don’t Care.. 62 வருஷமா நான் பார்க்காத விமர்சனங்களா? என்றார்.

மேலும், “மதிமுகவினரை கரைத்து கொண்டு வருகிறார்கள்.. விரைவில் தவெகவுடன் கட்சியை வைகோ இணைத்துவிடுவார் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்” என ஒரு செய்தியாளர் கேள்வி கேட்க, “இந்த உளறல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.. ஏ.. நீங்க என்ன வேணும்னாலும் கேட்கனும் நினைப்பீங்களா? ஏ..ஏ.. என்ன வேணும்னாலும் கேட்பீங்களா? யோவ்… இருங்கய்யா.. நீங்க ப்ளான் பண்ணி வரும் போதே, “என்ன வேணும்னாலும் கேட்கலாம்”னு வருகிறீங்க.. எங்க கட்சியை எந்த காலத்திலும் எவனும் கரைக்க முடியாது.. 32 வருஷமா எங்களைவிட கடந்துவந்த கட்சி எதுவும் கிடையாது.. எம்ஜிஆர் ஒருவரைத் தவிர.. விஜய் ஒருவரைத் தவிர.. குதர்க்கமா, எங்க கட்சியை கேவலப்படுத்த நினைச்சுகிட்டு கேட்கிறீங்க.. நீங்க அதோட (திமுக) மெம்பரா? அதனுடைய ஏஜெண்டா? இல்லை அவங்ககிட்ட ஏதாவது ஏற்பாடு பண்ணி வாங்கிட்டீங்களா? இல்லைன்னா என்கிட்ட ஏன் கேட்கிற? திரும்ப திரும்ப கேட்குற.. திரும்ப திரும்ப அந்த கேள்வியை ஏன் கேட்கிற? வேணும்னே என்னை புண்படுத்தனும்னு கேட்கிறியே.. உனக்கு மனசாட்சி கிடையாதா? என்னை புண்படுத்தனும்.. நான் கோபப்பட்டு பேசனும்” என்றார்.
இன்னொரு செய்தியாளர், “நீங்க எந்த கேள்வி கேட்டாலும் சாதுரியமாக பதில் சொல்லக் கூடிய தலைவர்.. அண்மைக்காலமாக நீங்க” என கேட்டு முடிப்பதற்குள், “அண்மைகாலமாக என் மேல நீங்க கல்லை போடனும்னு வந்துருக்கீங்க… இந்த நைஸ் பேச்சு எல்லாம் வேண்டாம்.. என்னை எவ்வளவு காயப்படுத்த முடியுமோ புண்படுத்த முடியுமோ திட்டமிட்டு ஒரு கூட்டமா வந்திருக்கீங்க.. நான் பதில் சொல்றேன்” என வைகோ கூறினார்.

அடுத்ததாக மல்லை சத்யா குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி கேட்க, “முட்டா பயலுகளுக்கு எல்லாம் பதில் சொல்லமாட்டேன்” என மீண்டும் கோபப்பட்டார் வைகோ. அப்போது, “நீங்க வேணும்னே என்னை கொந்தளிக்க வைக்கனும்னே எதை வேணும்னாலும் கேட்குறீங்க… என்னை எப்படி எப்படி சீண்டனும்.. புண்படுத்தனும்னு ப்ளான் பண்ணிட்டு வர்றீங்க.. உனக்கு எல்லாம் மனசாட்சி கிடையாதுய்யா.. ராத்திரி வீட்டுல படுக்க போகும்போது இந்த ஆளை ஏன் புண்படுத்தனும்னு நீ நினைப்ப” என்றார் வைகோ.

ஆனாலும் அந்த செய்தியாளர் மீண்டும் கேள்வி கேட்க, “நீ கேள்வியை வேணும்னே கேட்கிற. நீ கேள்வியா கேட்கிற? கட்சிக்கு துரோகம் பண்ணிட்டு போற பயலை பத்தி எல்லாம் என்கிட்ட கேட்காதே..” என மீண்டும் கொந்தளித்தார் வைகோ.









