சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும் எருமேலி களையிழந்துள்ளது. பம்பையிலும் வழக்கமான கூட்டம் இல்லை. இதையடுத்து, பக்தர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆன்லைன் முன்பதிவு மற்றும் நேரடி முன்பதிவு முறைகள் நடைமுறையில் உள்ளன.
ஆனால், ஆன்லைன் முன்பதிவு முழுவதுமாக நிரம்பியிருந்தாலும், முன்பதிவு செய்தவர்களில் பலர் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால் சபரிமலையில் பக்தர்கள் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

கடந்த ஆண்டைவிட 1.5 லட்சம் பக்தர்கள் குறைவு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தின் தொடக்கத்திலேயே பக்தர்கள் வருகை பெருமளவில் குறைந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி 26,131 பேரும், நவம்பர் 17-ந் தேதி 35,073 பேரும், நவம்பர் 18-ந் தேதி 40,037 பேரும் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு இதே நாட்களில் முறையே 53,278 பேர், 98,915 பேர், 1,12,056 பேர் தரிசனம் செய்திருந்தனர். அதாவது, கடந்த ஆண்டின் முதல் 3 நாட்களில் மொத்தம் 2,64,249 பக்தர்கள் தரிசனம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 3 நாட்களில் 1,01,241 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முதல் 3 நாட்களில் மட்டும் 1,63,008 பக்தர்கள் குறைவாக வந்துள்ளனர்.
நவம்பர் 19-ந் தேதி 46,603 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 20-ந் தேதி மாலை 5 மணி நிலவரப்படி 46,513 பேர் தரிசனம் செய்திருந்தனர்.

களையிழந்த எருமேலி.. கூட்டம் குறைந்த பம்பை
சபரிமலை யாத்திரையில் முக்கியமான இடமாக எருமேலி விளங்குகிறது. இங்கு பேட்டை துள்ளல் உள்ளிட்ட வழிபாடுகளை முடித்துவிட்டு பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம்.
மண்டல பூஜை காலத்தில் எருமேலியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் வழக்கமான பரபரப்பு இல்லை. அதேபோல சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கூடும் முக்கிய இடமான பம்பையிலும் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால், சிலர் திரும்பிச் சென்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்
பக்தர்கள் வருகை குறைந்துள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, நவம்பர் 30-ந் தேதி வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நேரடி முன்பதிவு எண்ணிக்கையையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக செங்கன்னூரில் புதிய நேரடி முன்பதிவு மையம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.









