காவிரியில் 11 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகா மாநிலத்திற்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தள்ளுபடி செய்தது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுவதில்லை. நடப்பு பாசன ஆண்டில் ஜூலை தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் 11 டிஎம்சி நீர் பற்றாக்குறை உள்ளது.
இந்த நிலையில் 11 டிஎம்சி நீரை உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். நீர் பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் அணைகளின் நீர் இருப்பிற்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் நீரை பங்கிட்டு தர அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் விசாரித்தனர்.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்கறிஞர்கள் உமாபதி, குரு கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
அவர்கள், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு தொடர்ந்து அவமதித்து வருகிறது. அதோடு காவிரி ஆணையமும் ஒருதலைபட்சமாக கர்நாடகாவுக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கான உரிய நீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
மேலும், கர்நாடகாவில் உள்ள நான்கு முக்கிய நீர் தேக்கங்களில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா பாசனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசின் வாதங்களுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தது.
அம்மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆஜராகி, ”காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை ஏற்கனவே இரு மாநிலங்களுக்கான நீர் பங்கீட்டை கண்காணித்து வருவதால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இதற்கிடையே கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்தது.
அதன்படி கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு மொத்தம் மூன்று மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் மீது இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அதில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த 11 டிஎம்சி பற்றாக்குறை நீரை உடனடியாக திறந்த விட கேட்டு தாக்கல் செய்த மனுவையும்,
நீர் பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை பங்கீட்டுத்தர உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
மேலும் 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா திறக்காததை எதிர்த்து தாக்கல் செய்த மூன்றாவது மனுவை விசாரித்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் இன்னும் எத்தனை மனுக்களை தான் தாக்கல் செய்வீர்கள் என்று அதிருப்தி தெரிவித்தனர்.
தொடர்ந்து மூன்றாவது மனுவையும் தள்ளுபடி செய்யப்போவதாக கூறிய போது, தமிழக அரசு சார்பில் இந்த மனுவின் அவசியத்தை விளக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மூன்றாவது மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின், ”குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.









