திருப்பரங்குன்றம் தீர்ப்பு: மாநில அரசின் உரிமையில் தலையிட்டு அச்சுறுத்துவதா? – சிபிஎம் காட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 20 Nov 2026, 5:28 PM

Thiruparankundram

திருப்பரங்குன்றனத்தில் இதுவரையிலும் தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்று சொல்வது நியாயமற்றதாகும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாநில அரசு எதிராக உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. இது இடைக்கால தீர்ப்பு தான் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டு, இதுவரையிலும் தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்று சொல்வது நியாயமற்றதாகும். தமிழ்நாடு அரசு மற்றும் கோவில் நிர்வாகம் நில அளவைக் கல் தூணில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக இங்கு தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்பு நியாயமற்றதாகும். பொதுவாக, இடைக்கால தீர்ப்புகள், தீர்ப்பு வழங்கப்படும் வரை தற்கால நிலையே தொடரட்டும் என்று சொல்வதே வழக்கமாக இருந்திருக்கிறது.

ADVERTISEMENT

அதேபோன்று, சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிற நிலையில் எவ்வித அவசியமும் அற்ற நிலையில் மத்திய அரசின் தொழிலக காவல் படையை பயன்படுத்தலாம் என்பது அப்பட்டமாக மாநில அரசின் உரிமையில் தலையிட்டு, மாநில அரசை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்.

எனவே, மாநில அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பதட்டத்தை ஏற்படுத்த முனையும் மதவெறி சக்திகளை உறுதியுடன் எதிர்கொண்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உறுதியோடு மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel