கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்.
வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று பிற்பகலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அதேசமயம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆறு மாதங்களில் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ள சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் தனது இரங்கல் செய்தியில், “பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்களோடு மக்களாகப் பழகிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று தெரிவித்திருந்தார். நேற்று பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் வி.எஸ் பாபு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்; குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார். வி.எஸ். பாபு மறைவைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இன்று தமிழக முதல்வரின் திருச்சி பயணமும் ரத்து செய்யப்பட்டது.

வி.எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் அவரது குடும்பச் சடங்குகளுக்குப் பின் தொடங்கியுள்ளது. இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார். வி.எஸ் பாபு உடலில் தமிழக வெற்றிக் கழக கொடி போர்த்தப்பட்டுள்ளது. அவரது உடலைச் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றிய முதல்வர் இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்கிறார். அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், மரியவில்சன், வெங்கடரமணன், விஜய் பாலாஜி, விஜய் பார்த்திபன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.









