முதுமலை வனப் பகுதிக்குள் சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரத்தில் கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் என்னைப் போன்றவர்கள் களத்தில் தீவிரமாக சனாதனத்திற்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் செயல்படுவதை பொறுக்க முடியாதவர்கள் அற்ப அரசியல் செய்கிறார்கள் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
முதுமலை வனப்பகுதிக்குள் செல்ல உயர்நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விதிகளை மீறி அமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அமைச்சரின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அண்ணாமலையின் ‘வி தி லீடர்’ அமைப்பினர் தேசியப் புலிகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் வன்னியரசு விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழக அமைச்சர் அமர்ந்திருக்கும் சபாரி வாகனம் கர்நாடக மாநிலத்தின் பதிவு எண்ணைக் கொண்டுள்ளது. அது கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனம் என்பது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிய வருகிறது. வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அனைவருக்கும் விதிகள் ஒன்றுதான். இந்த விஷயத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறை டிஜிபி சலீம் மற்றும் முதன்மை வனத்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். வனப்பகுதியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்; யாருக்கும் விதிவிலக்கு கிடையாது” என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் வன்னியரசு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் விதிமீறலைச் செய்யவில்லை என்பதை விளக்கி உள்ளேன். இது ஒரு அற்ப அரசியலுக்காகச் செய்யப்படுகிறது. என்னைப் போன்றவர்கள் களத்தில் தீவிரமாகச் சனாதனத்திற்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் செயல்படுவதால் பொறுக்க முடியாதவர்கள் இதைச் செய்கிறார்கள்” என்றார்.









