பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

By Kavi

|

Published on 20 Nov 2026, 12:57 PM

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மென்பொறியாளர் கௌதமன் மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதில், ”ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகளை கையாளும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இட நெருக்கடியை சமாளிக்க பரந்தூரில் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக நிலத்தை கையகப்படுத்த 680 கோடி ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு 48 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இந்த சூழலில் புதிதாக பொறுப்பேற்ற அரசு இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023ல் அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில் எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும், நிபுணர் குழுவின் அறிக்கைகளும் இல்லாமல் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனவே சட்டப்பேரவையில் வெளியிட்ட முதல்வரின் அறிவிப்பை அமல்படுத்த தடைவிதிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவிட்ட பிறகு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது ஏன். இவ்வளவு ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு, ஒரு திட்டத்தை எப்படி பாதியிலேயே கைவிட முடியும்? உங்கள் விருப்பப்படியோ அல்லது நினைத்தபடியோ விமான நிலையங்களை அமைத்துவிட முடியாது” என்று நீதிபதிகள் கூறினர்.

இதற்கு அரசு சார்பில், ”சம்பந்தப்பட்ட நிலத்தில் நீர்நிலையும் விவசாய நிலமும் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கடினமானது. ஒரு தவறான முடிவை சரி செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டது

இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசும் தமிழக அரசும் இந்திய விமான நிலைய ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel