யுபிஐ மோசடியில் பணம் போனால், “உங்க பின் நம்பரை நீங்கதான் போட்டிருக்கிங்க, நாங்க பொறுப்பில்லை” என்று வங்கிகள் கைவிரித்துவிட முடியாது என்பதைத் தெலங்கானா மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.85,000 வழங்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு (SBI) ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
யுபிஐ பின் பயன்படுத்தப்பட்டது என்பதாலேயே, வாடிக்கையாளர்தான் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் கொடுத்தார் என்று ஆகிவிடாது என்றும் இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது.
ரூ.55,000 எப்படிப் போனது?
தெலங்கானாவைச் சேர்ந்த 44 வயதுப் பெண்ணின் எஸ்பிஐ கணக்கிலிருந்து, 2022 நவம்பர் 3 அன்று யுபிஐ மூலம் ரூ.55,000 எடுக்கப்பட்டது. தான் யாருக்கும் அந்தப் பணத்தை அனுப்பவில்லை என்றும், தன் ரகசிய வங்கி விவரங்களை யாரிடமும் பகிரவில்லை என்றும் அவர் சொன்னார்.
உடனே நவம்பர் 6 அன்று தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்திலும், நவம்பர் 7 அன்று வங்கியிலும் புகார் கொடுத்தார்.
வங்கி என்ன வாதம் வைத்தது?
- வாடிக்கையாளரின் யுபிஐ பின், மொபைல் சிம் சரிபார்ப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டதால், அவரது அனுமதி இல்லாமல் பரிவர்த்தனை நடந்திருக்க வாய்ப்பில்லை.
- வாடிக்கையாளரின் கவனக்குறைவால்தான் பணம் போயிருக்கலாம்.
- புகார் கொடுப்பதில் தாமதம் ஆகியிருக்கிறது.
ஆணையத்தின் பதில்
இந்த வாதங்களை ஆணையம் ஏற்கவில்லை. யுபிஐ பின் பயன்படுத்தப்பட்டிருப்பது மட்டும் வாடிக்கையாளர் ஒப்புதல் கொடுத்ததற்கான சான்று ஆகாது என்று அது கூறியது. வாடிக்கையாளர்தான் பணத்தை அனுப்பினார், அல்லது ரகசியத் தகவல்களைப் பகிர்ந்தார் என்பதற்கான உறுதியான ஆதாரத்தை வங்கிதான் தர வேண்டும் என்றும் தெரிவித்தது.
மொத்தம் ரூ.85,000
நவம்பர் 10 அன்று பிறப்பித்த உத்தரவில் ஆணையம் இவற்றை வழங்கச் சொல்லியுள்ளது:
- இழந்த ரூ.55,000 திருப்பிக் கொடுப்பு.
- சேவைக் குறைபாட்டுக்கு ரூ.20,000 இழப்பீடு.
- வழக்குச் செலவுக்கு ரூ.10,000.
மொத்தம் ரூ.85,000.
பணம் போய்விட்டால்: உடனே வங்கியிலும் தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்திலும் புகார் கொடுங்கள். சைபர் மோசடிக்கான உதவி எண் 1930-ஐயும் அழைக்கலாம். எவ்வளவு சீக்கிரம் சொல்கிறீர்களோ அவ்வளவு நல்லது.









