11 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்து விட கோரி தமிழக அரசு வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

By Mathi

|

Published on 20 Nov 2026, 12:08 AM

தமிழகத்துக்கு 11 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தீர்ப்பு வழங்க உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதைக் கண்காணிப்பதற்காக காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

ஜூலை 28-ந் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் கிடைப்பதை கர்நாடகா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதை ஜூலை 30-ந் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது.

ADVERTISEMENT

ஆனால், இந்த உத்தரவின்படி கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறி ஆகஸ்ட் 3-ந் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் 17-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா அரசு செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 12 முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீரும், ஆகஸ்ட் 25 முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீரும் தமிழகத்துக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. செப்டம்பர் 8-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

செப்டம்பர் 24-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் சுமார் 20 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தற்போது உத்தரவிடும் அளவுக்குத் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டும் போதாது; ஏற்கெனவே வழங்காமல் நிலுவையில் உள்ள தண்ணீரையும் கர்நாடகா அரசு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு கர்நாடகா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், குடிநீர்த் தேவைகளுக்காகத் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் மனுவுக்கு கர்நாடகா அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, செப்டம்பர் 24-ந் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு 52.935 டிஎம்சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், அதைவிடக் குறைவான தண்ணீரே கிடைத்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

இவ்வாறு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை ஒழுங்காற்றுக் குழு பதிவு செய்தபோதும், அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகாவுக்கு உத்தரவிடவில்லை. மாறாக, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை வினாடிக்கு 6,000 கனஅடியிலிருந்து 4,000 கனஅடியாகக் குறைத்தது.

அக்டோபர் 8-ந் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், அக்டோபர் 9 முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. ஏற்கெனவே வழங்க வேண்டிய தண்ணீர் நிலுவையில் இருக்கும்போது, புதிதாகத் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவையும் குறைப்பது சரியல்ல என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அக்டோபர் 7-ந் தேதி நிலவரப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் 11 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தத் தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

மேலும், அடுத்த 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.3 டிஎம்சி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேருவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் இரு மாநிலங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தெளிவான நடைமுறையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை உருவாக்கவில்லை என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியது.

இந்த மனு அக்டோபர் 12-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கர்நாடகாவில் மழை குறைவாகப் பெய்திருந்தாலும் கிடைத்துள்ள தண்ணீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். வறட்சியால் ஏற்பட்டுள்ள நீர்ப் பற்றாக்குறையின் முழுப் பாதிப்பையும் தமிழகத்தின் மீது சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், காவிரி நீர் கிடைக்காததால் தமிழகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவில் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. குடிநீர்த் தேவைகளுக்காகவும் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழகத்துக்கு கூடுதலாக 11 டிஎம்சி தண்ணீர் வழங்குவது கடினம் என்று வாதிட்டார்.

மேலும், நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் என்றும், ஆனால் அந்த மழையால் கர்நாடகாவுக்குப் பயனில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், இரு மாநிலங்களிலும் மழை குறைவாகப் பெய்துள்ள நிலையில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை எவ்வாறு ஈடுசெய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர். சாதாரணமாக மழை பெய்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்று நீதிபதி விக்ரம் நாத் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க முடியாது என்றும், குறைந்தபட்சம் தற்காலிக ஏற்பாடாகவாவது தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இரு மாநிலங்களின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த நிலையில், காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர் 20) பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள 11 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடப்படுமா என்பது உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரியவரும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel