கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சிகிச்சை தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்துச் சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பாக நவம்பர் 5 மற்றும் 12-ந் தேதிகளில் தாம் அளித்த மனுக்களைப் பரிசீலிக்குமாறு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு இன்று (நவம்பர் 19) உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, வி.எஸ்.பாபுவின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜி.தேவராஜன் காவல்துறையில் இன்று ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
மேலும், வி.எஸ்.பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் தேவராஜன் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.









