வி.எஸ்.பாபு மரணத்தில் நெருடல் – தமிழிசை

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Nov 2026, 5:58 PM

சட்டமன்ற உறுப்பினரோ அல்லது அரசியல்வாதியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களது உடல்நிலை குறித்து அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவது எப்போதும் உள்ள நடைமுறை. ஆனால் வி.எஸ்.பாபு விஷயத்தில் அது முறையாக வெளிப்படுத்தப்படவில்லை என்ற நெருடல் இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “வி.எஸ். பாபு மறைவிற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

75 வயது வரை அவர் ஆரோக்கியமாக இருந்ததை நான் நிறைய அரசியல் நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். குறுகிய காலத்தில் உடல்நலப் பாதிப்பால் அவர் உயிரிழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. இது சரிசெய்யக் கூடியதா என்பது தெரியவில்லை. நுரையீரல் தொற்று காரணமாகத்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை குறித்து எந்த மருத்துவம் குறித்து வெளிப்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது; உடல்நிலை குறித்து அறிக்கை கொடுத்திருக்கலாம்.

சாதாரணமாக, முக்கியமான சட்டமன்ற உறுப்பினரோ அல்லது அரசியல்வாதியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களது உடல்நிலை குறித்து அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவது எப்போதும் உள்ள நடைமுறை. ஆனால், இது சரியாக நடைபெறவில்லை என்ற ஒரு சிறிய நெருடல் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அது ஒருவேளை குடும்பத்தின் அழுத்தமாக இருக்கலாம், அல்லது அரசியல் அழுத்தமாக இருக்கலாம், அல்லது மருத்துவமனையின் நிலைப்பாடாகவும் இருக்கலாம்; தெரியவில்லை.

ADVERTISEMENT

தினம்தோறும் அல்லது இடையிடையே அவரது மருத்துவம் குறித்து அறிக்கை வந்திருந்தால் நமக்கு ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால், அவர் இன்றைக்கு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி நமக்கு வருத்தத்தைத் தருகிறது. அவருக்கும், அவரது இயக்கத்திற்கும், குடும்பத்திற்கும் நமது அனுதாபங்கள்” என்று தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel