கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு வடசென்னை மக்களுக்கு பேரிழப்பு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”வி.எஸ். பாபு மிகவும் அன்பானவர்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். எங்கள் தலைவரின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவர்; எங்கள் குடும்பத்தின் ஒரு மூத்த உறுப்பினர். அண்ணன் வி.எஸ். பாபு அவர்களின் உயிர் பிரிந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் கடினமான காலகட்டங்களில் எங்களுடனும், தலைவருடனும் சேர்ந்து பணியாற்றியவர்.
வடசென்னையின் முகமாகவும், வடசென்னை மொழியைப் பேசும் நபராகவும் திகழ்ந்தவர். கடினமான காலகட்டங்களில்கூட சிரித்த முகத்துடன் இருப்பார். தமிழக வெற்றிக் கழகத்தில் அவரும், அவருடைய மகன்களும் இணைந்தபோது எங்கள் தலைவருடன் உரையாடினார்.
அப்போது, ‘சென்னையில், குறிப்பாக வடசென்னையில் மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று தலைவருடன் நடந்த முதல் சந்திப்பிலேயே மக்கள் பிரச்சினையைப் பேசியவர். கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் மக்கள் விரும்பக்கூடிய வகையில், அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்தவர். அவரது எளிமையான வடசென்னை மொழி அன்பாலும் தைரியத்தாலும் நிறைந்தது.
பெரம்பூருக்கு அடுத்து வடசென்னைக்குத்தான் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் எனத் தலைவரை அழைத்தவர் வி.எஸ். பாபு. கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவு வடசென்னை மக்களுக்குப் பேரிழப்பாகும். அண்ணன் வி.எஸ். பாபுவின் குடும்பத்திற்கு என்றும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அண்ணன் வி.எஸ். பாபு விரும்பியபடி வடசென்னையின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.









