கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு இன்று (நவம்பர் 19) காலமானார்.
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி எஸ் பாபு.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உயிர் காக்கும் கவசங்களுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்.
இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து சமீப நாட்களாக எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் கொளத்தூரை சேர்ந்த வாக்காளர் தேவராஜன், வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து தகவல் வெளியிட உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த சூழலில் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம், வி எஸ் பாபு மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் காலமானார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக 2026 செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவக் குழுவினர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு விரிவான மருத்துவச் சிகிச்சை அளித்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, 2026 நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் மறைவெய்தினார்.
இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எம்ஜிஎம் மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் வி எஸ் பாபு மறைவால் கொளத்தூர் தொகுதியும் காலியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









