தவெக, திமுக ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. ஆனால், அந்த விமர்சனங்கள் ஆபாசப் பதிவுகளாக இருக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி, எஸ். நடராஜன் மற்றும் ஜி. சந்திரபோஸ் ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், “திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் ஏஐ மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகளை வெளியிடுகின்றனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த எக்ஸ் தளப் பதிவு ஒன்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாகக் நீதிபதி குறிப்பிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி, இதுபோன்று பதிவு போட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் இது தொடர்பாக, காவல்துறையும் எக்ஸ் நிறுவனமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி மற்றும் எக்ஸ் கார்ப்பரேஷன் தரப்பு வழக்கறிஞர் அருண் சி. மோகன் ஆகியோர், இதுதொடர்பாக தங்கள் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளக் குற்றங்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதும், ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதும் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வாகாது. ஏனெனில், அந்தப் பதிவுகள் ஏற்கெனவே லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துவிட்டன.
எனவே, இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் நபர்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் அச்சம் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “ஆளுங்கட்சியான தவெக ஆதரவாளர்கள் மீது திமுகவினர் அளித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறை இதுவரை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. ஆனால், அரசியல் விவகாரங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவித்ததற்காகக்கூட திமுக ஆதரவாளர்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வதிலும், அவர்களைக் கைது செய்வதிலும் காவல்துறை அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
உதாரணமாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் அரசியல் விமர்சகருமான திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் அகமது ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தும் அளவுக்குக் காவல்துறை சென்றது.
இருவரும் இணைந்து பதிவு செய்த வீடியோ நேர்காணலை யூடியூபில் வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, வாட்ஸ்அப் எல்எல்சி, மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஸ்வாதி அகர்வால், வருண் பதக் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, தமிழக காவல்துறை உருவாக்கவுள்ள சமூக வலைதளக் குற்றங்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-க்கு கூடுதலாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.









