தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர், அடுத்த இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
ஆளுநர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது குறிப்பிட்ட உடல்நலப் பாதிப்புகளால் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அதேசமயம், சளித் தொந்தரவு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜ்பவனுக்குத் திரும்புவார் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.









