நா.மணி
தமிழ்நாட்டின் நீர் வளத்தை பாதுகாப்பதில் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அக்கறையுள்ள அனைவரும் பங்களிப்பு செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஏரி என்ற பெயரிலேயே (eri.tn.gov.in) ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளது. நீர் நிலைகள் பாதுகாப்பில் இது முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும். நீர்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றே பல காலம் கருதி வருகிறோம். அது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பும் ஏன் மறந்தோம் என்பதே புரியவில்லை. அரசு, தன்னையும் சமூகத்தையும் இணைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த இணையதளம் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகளில் ஏரிகளும் குளங்களும் முக்கிய இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் வேளாண்மை, குடிநீர், கால்நடை வளர்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கேற்ப நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன.
அவற்றைப் பராமரிப்பது உள்ளூர் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக இருந்தது. காலப்போக்கில் நிர்வாக அமைப்புகள் மாறின. நீர் நிலைகளின் பராமரிப்பும் பல்வேறு அரசுத் துறைகளின் பொறுப்புகளாகப் பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்நிலைகளின் பாதுகாப்பில் மக்களின் நேரடிப் பங்களிப்பு குறைந்தது. இந்தச் சூழலில், நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைப்பதற்கான இணைய தளமாக ERI இணையதளம் அமைந்துள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான நீர்நிலைகள்

இந்த இணையதளம் வழியாக தமிழ் நாட்டின் நீர் நிலைகள் பற்றி எல்லோரும் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 1,03,224 நீர்நிலைகள் உள்ளன.இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 81,899 நீர்நிலைகள் உள்ளன. அதாவது 79.34 விழுக்காடு நீர் நிலைகள் உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ளன.
அதனை அடுத்து பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள நீர்வளத்துறையில் 4.22 விழுக்காடு (14,304) நீர் நிலைகள் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 2,372, பேரூராட்சிகள் இயக்ககத்தின் கீழ் 2,249, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் 1,863, வனத்துறையின் கீழ் 292, சென்னை மாநகராட்சியின் கீழ் 245 நீர்நிலைகள் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகின்றன. தமிழ்நாட்டின் நீர் வள மேலாண்மை என்பது ஒரே துறையின் பொறுப்பு அல்ல. அதேசமயம் இதில் உள்ளாட்சி துறைக்கும் நீர் வளத்துறைக்கும் மிக அதிகபட்ச பொறுப்பு இருக்கிறது. கோயில் நிர்வாகத்தில் உள்ள நீர் நிலைகள், வனப் பகுதியில் உள்ளவை நாம் அறியாதவை. சென்னையில் 245 நீர் நிலைகள் இருப்பது இப்போது தான் தெரிகிறது. அதில் பராமரிப்பு பயன்பாட்டில் உள்ளது என்பதை பற்றி சென்னை மக்கள் தெளிவு பெறவேண்டும்.
நீர் நிலைகள் தொடர்பான தகவல்கள் ஓரிடத்தில்
பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் நீர்நிலைகள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு நிர்வாக ஒத்துழைப்பும் மக்கள் பங்கேற்பும் அவசியம். இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்?
ஒரு கிராமத்தில் உள்ள ஒரு ஏரி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைக் கண்டறிவதற்கே பொதுமக்கள் பல்வேறு அலுவலகங்களை அணுக வேண்டிய நிலை இருந்தது. இப்போது இணையதளத்தின் மூலம் நீர்நிலைகள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடைமுறை சிக்கல்கள் குறைப்பு

தங்கள் ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை அடையாளம் காணவும், அவை எந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை அறியவும் முடியும். ஒரு நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலோ, கழிவுநீர் கலக்கப்பட்டாலோ, நீர்வரத்துப் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தாலோ, கரைகள் சேதமடைந்திருந்தாலோ அவற்றை ஆவணப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பிற தகுதியான அமைப்புகள் இணையதளத்தின் வழியாக முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, உரிய அனுமதிகளைப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையை ஒருங்கிணைப்பதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இதற்கான அனுமதிகளை 15 நாட்களுக்குள் வழங்குவது அரசின் அறிவிக்கப்பட்ட இலக்காக வைத்துள்ளது. இதனால் நீர்நிலைப் புனரமைப்பில் ஆர்வமுள்ள அமைப்புகளுக்கு நடைமுறைச் சிக்கல்கள் மிகவும் குறைய வாய்ப்புள்ளது.
சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு
ஏரி இணையதளம் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு ஒரு தகவல் அறியும் கருவி என்று மட்டும் கருதி விடக் கூடாது. அது, சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பையும் வழங்குகிறது. ஒரு பகுதியில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை, பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்யலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ஏரியின் பராமரிப்புக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? எவ்வளவு செலவிடப்பட்டது? கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டது? ஆக்கிரமிப்புகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? புனரமைப்புப் பணிகளின் தரம் எவ்வாறு கண்காணிக்கப்பட்டது? போன்ற கேள்விகளை எழுப்ப முடியும். நமக்கு தேவையான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செயல்பாடுகளை ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நீர் நிலை பாதுகாப்பில் உள்ளூர் சமூகம்
நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு சார்ந்த பிரச்சினை. ஆனால் மக்கள் பங்கேற்பும் மிக மிக அவசியம்.
ஒரு நீர்நிலையைப் பாதுகாப்பதற்காக அரசு நிதி ஒதுக்கலாம். பொறியாளர்கள் நியமிக்கலாம். ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் அந்த நீர்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ளூர் மக்களின் பங்கேற்பு இல்லையென்றால் அதன் நீடித்த பயனை உறுதிப்படுத்துவது சாத்தியம் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது நகரப் பகுதியிலும் நீர்நிலைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும் . உள்ளூர் விவசாயிகள், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோரை இதில் இணைக்க வேண்டும். நீர்நிலைகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது, நீர்வரத்துப் பாதைகளைப் பாதுகாப்பது, கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது, நீர் மாசுபாட்டைக் கண்டறிவது போன்ற பணிகளில் மக்கள் பங்கேற்க முடியும்.
அதேநேரத்தில், நீர்நிலைகளில் தூர்வாருதல், மண் அகற்றுதல், கரைகளை மாற்றியமைத்தல் போன்ற பணிகள் உரிய அரசுத் துறைகளின் அனுமதியுடனும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
நீர்நிலைப் பாதுகாப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்துவது நீண்டகால சமூக மாற்றத்திற்கு உதவும். ஒரு கல்லூரி தன்னைச் சுற்றியுள்ள ஐந்து அல்லது பத்து நீர்நிலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் நிலை குறித்த கள ஆய்வுகளை மேற்கொள்ளலாம். புவியியல் அமைப்பு, நீர்வரத்துப் பாதைகள், நிலத்தடி நீர் தொடர்பு, நீர் மாசுபாடு, உள்ளூர் மக்களின் பயன்பாடு போன்ற அம்சங்களை ஆய்வு செய்யலாம்.
பொருளாதாரம், புவியியல், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து மேற்கொள்ளும் இத்தகைய ஆய்வுகள் உள்ளூர் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயனுள்ள தரவுகளை வழங்கும்.
இது மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் சமூக அக்கறையை வளர்க்கும்.
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளையும்
பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அறிவியல் அடிப்படையிலான திட்டமிடல், உரிய அனுமதி, தொழில்நுட்பத் தரம், வெளிப்படையான செலவினம் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்யலாம்.
இதன் மூலம் அரசு நிதி, நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, உள்ளூர் மக்களின் பங்களிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு உருவாகும்.
சமூக ஆர்வலர்கள் அமைப்புக்களுக்கான வாய்ப்பு
சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நல்லோர் வட்டம் போன்ற அமைப்புகள் இந்த இணையதளத்தை ஒரு செயல்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
‘100 Fields of Social Responsibility’ என்ற கருத்தின் கீழ் நீர்நிலைப் பாதுகாப்பை ஒரு முக்கியமான சமூகப் பொறுப்புத் துறையாக முன்னெடுக்கலாம்.
‘ஒரு நீர்நிலை – ஒரு சமூகப் பொறுப்பு’ என்ற அணுகுமுறையை இதற்காக உருவாக்கலாம்.
முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாவட்டம் அல்லது சில மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளின் பட்டியலை இணையதளத்திலிருந்து பெற்று, சில நீர்நிலைகளைத் தேர்ந்தெடுத்து கள ஆய்வு மேற்கொள்ளலாம். அவற்றின் நிலை, உள்ளூர் மக்களின் தேவைகள், புனரமைப்புக்கான சாத்தியங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யலாம்.
ஒவ்வொரு நீர்நிலைக்கும் ஒரு உள்ளூர் பொறுப்புக் குழுவை உருவாக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் ஆகியோரை இணைக்கலாம். அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்படுவதோடு, தொழில்நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெறுவதற்கும் முயற்சி எடுக்கலாம். இவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தையும் செலவினங்களையும் பொதுமக்கள் அறியும் வகையில் ஆவணப்படுத்தலாம்.
முதலில் முன்னோட்டமாக செய்யும் மாவட்டத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தி, அதன் அனுபவத்தின் அடிப்படையில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடியும்.
தொழில்நுட்பமும் சமூகப் பொறுப்புணர்வும்

தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் ஏரிகளும் குளங்களும் உள்ளன என்று பார்த்தோம் . அவற்றின் உண்மையான நிலையை அறிய வேண்டும். அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் மீண்டும் சீரழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்கெல்லாம் அரசின் நிர்வாக நடவடிக்கைகளுடன் மக்களின் தொடர்ச்சியான பங்களிப்பும் தேவை.
ஏரி இணையதளத்தின் உண்மையான வெற்றி, எத்தனை பேர் அதில் பதிவு செய்கிறார்கள் என்பதல்ல. எத்தனை நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன, எத்தனை உள்ளூர் சமூகங்கள் இதில் ஈடுபடுகின்றன?, எத்தனை நீர்நிலைகள் மீண்டும் தங்கள் இயல்பான பயன்பாட்டுக்குத் திரும்புகின்றன? என்பதில்தான் இருக்கிறது. தகவல்களைத் திறந்துவிடுவது முதல் படி. அந்தத் தகவல்களை மக்கள் பயன்படுத்துவது அடுத்த படி. அவற்றின் அடிப்படையில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அதற்கடுத்த படி.
நீர்நிலைகளைப் பாதுகாப்பது எதிர்காலத் தலைமுறைகளுக்காக நாம் செய்ய வேண்டிய அடிப்படை கடமை. ஜென்மக் கடன்.
அரசின் இந்த இணையதள முயற்சி இணையற்ற முயற்சி. இதனை மக்கள் இயக்கமாக மாற்ற முடிந்தால், அது தமிழ்நாட்டின் நீர் வளப் பாதுகாப்பில் ஒரு மைல்கல்லாக அமையும்.









