திருப்பரங்குன்றம் ‘சர்வே’ தூண் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியருக்கு சரமாரி கேள்விகள்.. இன்று 3-வது நாளாக விசாரணை!

By Mathi

|

Published on 19 Nov 2026, 6:23 AM

Supreme Court-Thiruparankundram- Survey Pillar Case

திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 19) 3-வது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற அனுமதித்திருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த நவம்பர் 17-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அன்றைய விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெயதீப் குப்தா, சேகர் நாபடே மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.சி. சென் ஆகியோர் வாதிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று நவம்பர் 18-ந் தேதி நடைபெற்ற விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அகமதி ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

ADVERTISEMENT

சர்ச்சைக்குரிய தூண் பிரிட்டிஷ் காலத்து சர்வே கல் – தமிழக அரசு

மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சர்ச்சைக்குரிய கல்தூண் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் காலத்தில் நில அளவீட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சர்வே தூண் என்று தெரிவித்தார்.

இதற்கு ஆதாரமாக Great Trigonometrical Survey தொடர்பான வரலாற்று ஆவணங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பள்ளிவாசல் அருகே நில அளவீட்டு நிலையம் அமைந்திருந்ததற்கான குறிப்புகள் அந்த ஆவணங்களில் இருப்பதாகக் கூறினார்.

ADVERTISEMENT

ஆனால் சர்ச்சைக்குரிய தூணின் வெளித்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதைத் தீபத்தூண் என்று சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அந்தத் தூண் நில அளவீட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் தனி நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் ஆதாரங்களை உறுதிப்படுத்தாத அரசு

இதனைத் தொடர்ந்து, சர்வே தூண் தொடர்பான ஆவணங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவரங்களையும் கோபால் சங்கரநாராயணன் எடுத்துரைத்தார்.

1890-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நில அளவீட்டு ஆவணம், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தனிநபர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருந்த தகவல்களை அரசு அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக, சர்ச்சைக்குரிய தூண் எதற்காக அமைக்கப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்போது அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்களைத் தமிழக அரசு உறுதிப்படுத்துவதாக கோபால் சங்கரநாராயணன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான சர்வே கற்களுக்கு மத அடையாளம் ஏற்படும் – தமிழக அரசு

இந்த வாதத்தின் தொடர்ச்சியாக, சர்வே தூண்களை மத வழிபாட்டுக்கான தூண்களாக அங்கீகரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் தமிழக அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சர்வே தூண்கள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள சர்வே தூணை மத வழிபாட்டுக்கான தூணாக அங்கீகரித்தால், மற்ற சர்வே தூண்களுக்கும் மத அடையாளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழக்கூடும். இதுதொடர்பாக ஏராளமான ரிட் மனுக்கள் நீதிமன்றங்களுக்கு வரக்கூடும் என்று வாதிடப்பட்டது.

எனவே நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறையை மாற்றக் கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் பாரம்பரிய இடம்

அதேபோல திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறை குறித்தும் கோபால் சங்கரநாராயணன் விளக்கினார்.

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள கல்தூணில் தீபம் ஏற்றும் வழிபாட்டு மரபு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே வேறு இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரப்பட்டபோது குறைந்தது 3 முறை அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறையில் புதிய இடத்தைச் சேர்ப்பது பாரம்பரிய வழிபாட்டு முறையைப் பாதிக்கும் என்றும் வாதிட்டார்.

இந்த வாதங்களை விளக்குவதற்காக திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில், மலையின் மறுபுறம் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகியவற்றின் அமைவிடங்களைக் காட்டும் புகைப்படங்களும் ட்ரோன் காட்சிகளும் நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டன.

நில உரிமை குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்

கோபால் சங்கரநாராயணன் இவ்வாறு வாதிட்டபோது, சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பாக நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.

1923-ஆம் ஆண்டு சிவில் நீதிமன்றத் தீர்ப்பின்படி, குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மற்ற நிலங்கள் இந்துக் கோயில் தரப்புக்குச் சொந்தமானவை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது தமிழக அரசு உரிமை கோருகிறதா என்று கோபால் சங்கரநாராயணனிடம் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர், தமிழக அரசு அந்த நிலத்தின் மீது உரிமை கோரவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், நில உரிமை தொடர்பாக கூடுதல் விளக்கம் அளிப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெற வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

அப்போது, நிலத்தின் மீது தமிழக அரசு உரிமை கோராத நிலையில், அந்தத் தூண் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக அரசு தரப்பில் வாதிட முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் சர்ச்சைக்குரிய தூணின் வரலாற்றுப் பயன்பாடு தொடர்பான ஆவணங்கள் இந்த வழக்குக்குத் தொடர்புடையவை என்ற நிலைப்பாட்டை கோபால் சங்கரநாராயணன் முன்வைத்தார்.

தர்காவுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் நேரடி ஆய்வு – ஹுசைஃபா அகமதி

இதனைத் தொடர்ந்து சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அகமதி தனது வாதங்களை முன்வைத்தார்.

அப்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் மேற்கொண்ட நேரடி ஆய்வு தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 2025 நவம்பர் 19-ந் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதே நாளில்தான் தர்கா நிர்வாகம் வழக்கில் சேர்க்கப்பட்டது. ஆனால் நேரடி ஆய்வு நடைபெறுவதற்கு முன்பாக தர்கா நிர்வாகத்துக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்று ஹுசைஃபா அகமதி தெரிவித்தார்.

பொதுவாக ரிட் மனுக்களை விசாரிக்கும் அரசியல் சட்ட நீதிமன்றங்கள் இத்தகைய தனிப்பட்ட நேரடி ஆய்வுகளை மேற்கொள்வதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தர்கா நிர்வாகத்துக்கு நேரடி ஆய்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், சர்ச்சைக்குரிய தூண் அமைந்துள்ள இடம் மற்றும் நில உரிமை தொடர்பான விவரங்களை நீதிபதியிடம் விளக்கியிருக்க முடியும் என்றும் வாதிட்டார்.

ஆனால் தர்கா நிர்வாகத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், சர்ச்சைக்குரிய தூண் கோயில் நிலத்தில் இருப்பதாகத் தனி நீதிபதி முடிவு செய்துள்ளார் என்று ஹுசைஃபா அகமதி தெரிவித்தார்.

தர்கா நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தர்கா நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் குறித்த விவரங்களையும் ஹுசைஃபா அகமதி உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். 2025 நவம்பர் 19-ந் தேதி தர்கா நிர்வாகம் வழக்கில் சேர்க்கப்பட்டது. நவம்பர் 20-ந் தேதி தனிப்பட்ட நோட்டீஸ் கிடைத்தது. அதற்கு மறுநாள் நவம்பர் 21-ந் தேதி நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. இதையடுத்து நவம்பர் 24-ந் தேதி தர்கா நிர்வாகம் நீதிமன்றத்தில் ஆஜரானது. நவம்பர் 28-ந் தேதி முதல்கட்ட பதில் மனுவைத் தாக்கல் செய்தது. ஆனால் அதே நாளில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 1-ந் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வாறு குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டதால் தர்கா நிர்வாகத்தால் தனது தரப்பு வாதங்களையும் ஆவணங்களையும் முழுமையாக முன்வைக்க முடியவில்லை என்று ஹுசைஃபா அகமதி தெரிவித்தார்.

அதேநேரத்தில், மேல்முறையீட்டு விசாரணையில் தர்கா நிர்வாகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் இந்தக் குறை சரிசெய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கருதியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

1923-ஆம் ஆண்டு தீர்ப்பு – தர்கா தரப்பு வாதம்

அடுத்ததாக திருப்பரங்குன்றம் மலையின் நில உரிமை தொடர்பான 1923-ஆம் ஆண்டு சிவில் நீதிமன்றத் தீர்ப்பை ஹுசைஃபா அகமதி சுட்டிக்காட்டினார். அந்தத் தீர்ப்பு பின்னர் பிரிவி கவுன்சிலால் மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. அதில் தர்கா அமைந்துள்ள முழு மலைக்குன்று, நெல்லித்தோப்பு, பள்ளிவாசலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இஸ்லாமியத் தரப்பினரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.

குறிப்பாக அந்தத் தீர்ப்பில் “Whole of the hillock” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இதை வெறும் தர்கா கட்டிடத்தை மட்டும் குறிப்பதாகப் பொருள் கொண்டுள்ளது என்று ஹுசைஃபா அகமதி தெரிவித்தார்.

மேலும் சர்ச்சைக்குரிய கல்தூண் நெல்லித்தோப்புக்கும் தர்காவுக்கும் இடையில் அமைந்துள்ளது. எனவே அந்தத் தூண் கோயில் நிலத்தில் இருப்பதாகத் தனி நீதிபதி முடிவு செய்தது தவறு என்றும் வாதிட்டார். இதன் தொடர்ச்சியாக, நில உரிமை தொடர்பான பிரச்சினைகளை ரிட் மனுவின் மூலம் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய உரிமைப் பிரச்சினைகளுக்கு முறையான சிவில் வழக்கின் மூலமே தீர்வு காண வேண்டும். அதேபோல புதிய இடத்தில் தீபம் ஏற்றும் வழிபாட்டு மரபை உருவாக்குவதற்கான கோரிக்கையையும் சிவில் வழக்கின் மூலமே தீர்மானிக்க வேண்டும் என்று ஹுசைஃபா அகமதி வாதிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போதைய விசாரணையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பது தொடர்பான கோரிக்கையை மட்டுமே பரிசீலித்து வருவதாகத் தெளிவுபடுத்தினர். மேலும் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை உள்ளிட்ட வழக்கின் இறுதிப் பிரச்சினைகள் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இன்று இந்த வழக்கில் 3-வது நாளாக பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel