பெண்ணிடம் ரகளை செய்த விவகாரம்: தவெகவில் இருந்து நீக்கப்பட்ட பிரகாஷ் விளக்கம்

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2026, 10:21 PM

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் நடந்த தகராறு தொடர்பாக தவெக நிர்வாகி பிரகாஷ் வேடப்பட்டி பேரூராட்சி நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் தன்னைத் திட்டமிட்டு இந்த விவகாரத்தில் சிக்க வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் வேடப்பட்டி பேரூராட்சி நகரச் செயலாளராக இருந்தேன். ஆனால், இப்போது இல்லை; அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்தும் என்னை நீக்கிவிட்டார்கள். எதனால் நீக்கினார்கள் என்றால், சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் ஏதோ கடைக்குச் சென்று ரவுடியிசம் செய்தேன் என்று அவதூறு பரப்பினார்கள். என்னைத் திட்டமிட்டு அந்த விஷயத்தில் சிக்க வைத்துவிட்டார்கள்.

ADVERTISEMENT

சம்பவம் நடந்து இரண்டு, மூன்று நாட்களாகிவிட்டன. இன்றுவரை சிசிடிவி காட்சிகளை இன்னும் வெளியிடவில்லை. ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால்தான் அதன் உண்மைத்தன்மை தெரியும். காவல்துறை அதை விரைவில் அவர்களிடம் வாங்கி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திவ்யா, நான் குடிபோதையில் இருந்தேன் என்று பிரஸ் மீட் கொடுத்திருக்கிறார். நான் குடிபோதையில் இல்லை. நான் அந்த நேரத்தில் ரத்ததானம் செய்திருந்தேன். நான் குடிபோதையில் இருந்தேனா, இல்லையா என்பதை நீங்கள் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ரத்தம் கொடுத்துவிட்டு அப்போதுதான் வந்தேன். ரத்தம் கொடுத்ததற்கான சான்றிதழும் என்னிடம் உள்ளது.

ADVERTISEMENT

அதேபோல், நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை இந்தப் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். ‘இவனுக்குக் கீழ் நான் இருக்க வேண்டுமா?’ என்று என் உடன் இருக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டுகளில் இருக்கும் மற்றவர்களிடமும் இவர்கள் நிறைய முறை சொல்லியிருக்கிறார்கள். திவ்யா என்பவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் உள்ளன; மகாராஜன் என்பவர் மீதும் நிறைய புகார்கள் உள்ளன. திவ்யா என்பவர் என்னை நிற ரீதியாக நேரடியாக விமர்சித்துப் பேசினார். அடுத்தடுத்து நான் ஆடியோவை வெளியிடுகிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் மற்றும் கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோரும் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை விசாரித்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை; என்னிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளன. சட்டத்தின் முன் நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். என் மீது தவறு இருக்கும் பட்சத்தில் காவல்துறையும் கட்சியும் என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன். மகாராஜன் என்பவர் தளபதி ஆட்சி அமைத்த பிறகுதான் கட்சிக்குள் வந்தார். அவர் வந்தவுடன் கட்சிப் பதவி கேட்டார். ‘வேலை செய்தவர்கள் இருக்கிறார்கள், நீங்களும் வேலை செய்யுங்கள்; கட்சிப் பதவி தருகிறோம்’ என்று சொல்லியிருந்தோம். ஆனால் அவர், ‘இவர்களுக்கு கீழ் வேலை செய்ய வேண்டுமா?’ என்று எந்த வேலையும் செய்யாமல் இருந்தார். பதவிக்கு ஆசைப்பட்டு தேவையற்ற வேலைகளைச் செய்தார். வீரமணி, மகாராஜன் எல்லோரும் சேர்ந்து என்னை இந்தக் கட்சிப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காகவே என்னை இந்த விஷயத்தில் சிக்க வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எங்கள் அண்ணன் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை அண்ணா. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால்தான் இந்த அளவிற்கு இறங்கிப் பேசுகிறேன். என் மீது தவறு இருந்தால் நான் பின்வாங்கியிருப்பேனே! என் மீது எந்தத் தவறும் கிடையாது அண்ணா. எனக்கு ஒரே ஒரு கோரிக்கை அண்ணா; எனக்கு எந்த ஒரு கட்சிப் பதவியும் வேண்டாம், என்னை அடிப்படை உறுப்பினராக மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் கடைசிவரை கொடி பிடித்து பிரச்சாரம் செய்வேன். நான் செத்தாலும் எனது சமாதியில் உங்கள் கட்சிக் கொடி போர்த்தித்தான் புதைக்க வேண்டும்; அதுதான் எனது வேண்டுகோள். அடுத்தடுத்து நான் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுகிறேன். உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து, இதில் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வந்து எனக்குக் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel