கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில், பைக் ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க நிர்வாகி பிரகாஷ் ரகளையில் ஈடுபட்டதாக , ஷோரும் உரிமையாளர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுகுறித்து நேற்று ஷோரூம் உரிமையாளர் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தவெக நிர்வாகி பிரகாஷ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில் வேடப்பட்டி பேரூராட்சி நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் பிரகாஷ் 13.11.2026 அன்று ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பாக கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கழகத்தின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளதாகக் கருதப்படுவதால், கழகத்தின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டைப் பேணும் நோக்கில், அவர் வகித்து வரும் அனைத்து கழகப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
எனவே, 15.11.2026 முதல் இந்நீக்கம் நடைமுறைக்கு வருகிறது. கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.









