கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

By Kavi

|

Published on 18 Nov 2026, 9:15 PM

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகார் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல் செய்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது. 

ADVERTISEMENT

அவர் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

திமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது.  

ADVERTISEMENT

அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

சென்னையைச் சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த மனுவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எனவே கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி கடந்த நவம்பர் 11ஆம் தேதி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

நான் குற்றம் நடந்ததாக கூறவில்லை. ஆனால் எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் கேட்கிறேன். 

ஆளும் கட்சி எம்எல்ஏ என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் எந்த ஒரு அழுத்தத்துக்கும் ஆளாகாமல் நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். 

கள்ளக்குறிச்சி ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். 

மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மின்னணு ஆதாரங்களை காவல்துறை பாதுகாக்க உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். 

எனவே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel