கோழிகளைப் பெருமளவில் பாதிக்கும் பறவைக் காய்ச்சல் நோயைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாகத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நாளை (நவம்பர் 20) அறிமுகம் செய்து வைக்கிறார்.
பறவைக் காய்ச்சல் என்பது கோழிகள் உள்ளிட்ட பறவைகளைத் தாக்கும் தீவிரமான தொற்றுநோயாகும். இந்த நோய் கோழிப்பண்ணைகளில் பரவினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
நோய் பரவுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான கோழிகளை அழிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர்.
கோழி இறைச்சி, முட்டை விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் கோழிப்பண்ணைகளை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதன்முதலாகப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு H5N1, H5N8 ஆகிய வைரஸ்களால் 500-க்கும் அதிகமான நோய் பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2,200 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பால் அந்த மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்திற்கு இணையான பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பறவைக் காய்ச்சல் மிகப்பெரிய அளவில் பரவினால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும், நாட்டிலுள்ள மொத்தக் கோழிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் கோழிகளை மட்டுமின்றி மனிதர்களையும் பாதிக்கக்கூடிய நோயாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளில் 1,003 பேருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 479 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, தற்போது தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ள H5N1 வைரஸின் Clade 2.3.2.1a வகை, கோழிகளில் ஏற்பட்ட பெரும்பாலான பறவைக் காய்ச்சல் பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ளது. இந்த வகை வைரஸ் அண்மைக்காலங்களில் பாலூட்டி விலங்குகளிடமும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மனிதர்களுக்கும் 3 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த பறவைக்காய்ச்சல் பாதிப்பான H5N1 வைரஸின் Clade 2.3.2.1a வகைக்கு எதிராக இதுவரை குறிப்பிட்ட வணிகரீதியான தடுப்பூசி சந்தையில் இல்லை. இந்த நிலையில், போபாலில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
இது செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். இந்தியாவில் பரவி வரும் குறிப்பிட்ட H5N1 வைரஸ் வகையிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இந்தத் தடுப்பூசியை நாளை நவம்பர் 20-ந் தேதி போபாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் குறைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.









