கண்ணீரை வரவழைக்கும் ‘சின்ன வெங்காயம்’ விலை.. பெரிய வெங்காயத்துக்கு ‘ஜம்ப்’!

By Mathi

|

Published on 19 Nov 2026, 8:40 AM

Onion Price

சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.270 வரை உயர்ந்துள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் விலை குறைவாக இருக்கும் பெரிய வெங்காயத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகச் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையில் சின்ன வெங்காயத்தின் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை குறைவான விலையில் விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது சில்லறை விற்பனையில் கிலோ ரூ.250 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோயம்பேட்டில் என்ன விலை?

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையில் இன்று (நவம்பர் 19) முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.220-க்கும், இரண்டாம் தரம் ரூ.200-க்கும், மூன்றாம் தரம் ரூ.170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மொத்தச் சந்தையில் வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள், போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றைச் சேர்த்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.250 வரை உயர்ந்துள்ளது. சில சில்லறை சந்தைகளில் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

100 டன்னிலிருந்து 20 டன்னாக சரிந்த வரத்து

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்குச் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் வந்த நிலையில், தற்போது அதன் வரத்து சுமார் 20 டன்னாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சின்ன வெங்காயச் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காயப் பயிர்கள் மழையால் சேதமடைந்ததும், சந்தைக்கு வரத்து குறைந்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தேவை அதிகமாக இருக்கும் நிலையில் வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பெரிய வெங்காயத்துக்கு ‘ஜம்ப்’

சின்ன வெங்காயம் கிலோ ரூ.250-ஐத் தாண்டியுள்ள நிலையில், பெரிய வெங்காயம் குறைந்த விலையில் கிடைக்கிறது. பெரிய வெங்காயம் மொத்தச் சந்தையில் கிலோ ரூ.40 முதல் ரூ.58 வரை விற்பனையாகிறது. . இதனால் சின்ன வெங்காயத்தை வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, அதற்குப் பதிலாகப் பெரிய வெங்காயத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்ன வெங்காயம் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு விலை உயர்ந்துள்ள நிலையில், பெரிய வெங்காயத்தின் விற்பனைக்கு மவுசு அதிகரித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel