டாடா குழுமத்தின் கட்டுப்பாடு யாருக்கு? – கம்பட்டாவின் 4 பக்கக் கடிதத்தால் புதிய புயல்!

By Kavi

|

Published on 19 Nov 2026, 9:24 AM

டாடா குழுமத்தின் எதிர்காலம், டாடா சன்ஸைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும் விவகாரம் ஆகியவற்றில் மோதல் இன்னும் தணியவில்லை. டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் அறங்காவலரும் மூத்த வழக்கறிஞருமான டேரியஸ் கம்பட்டா, அறக்கட்டளைகளின் துணைத் தலைவர்களான வேணு சீனிவாசன், விஜய் சிங் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி, பல கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். டாடா சன்ஸின் மீதான கட்டுப்பாடு டாடா அறக்கட்டளைகளிடமே இருப்பதுதான் டாடா குழுமத்தின் அடிப்படை அடையாளம் என்பது அவரது உறுதியான கருத்து.

திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?

ADVERTISEMENT

நவம்பர் 17 அன்று எழுதிய நான்கு பக்கக் கடிதத்தில், வேணு சீனிவாசனும் விஜய் சிங்கும் தங்களது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறிவிட்டதாகக் கம்பட்டா சுட்டிக்காட்டியுள்ளார். 2024 மார்ச், 2025 மே, ஜூலை மாதங்களில் டாடா சன்ஸைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை எதிர்க்கும் நிலைப்பாட்டுக்கு இருவரும் ஆதரவு தெரிவித்ததாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் 2026 ஏப்ரலில் அவர்கள் நிலைப்பாட்டை மாற்றியதற்கான காரணத்தை இதுவரை விளக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

கட்டுப்பாடுதான் அடிப்படை என்கிறார்

ADVERTISEMENT

டாடா சன்ஸில் மூன்றில் இரண்டு பங்கு பங்குகள் டாடா அறக்கட்டளைகளிடம் உள்ளன. இந்தக் கட்டுப்பாடு, இப்போதைய நிர்வாகத்தின் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சி இல்லை என்றும், அது டாடா குழுமத்தின் அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பு என்றும் கம்பட்டா வாதிடுகிறார். டாடா சன்ஸைப் பாதுகாப்பது ஒவ்வொரு அறங்காவலரின் நம்பிக்கைப் பொறுப்பு என்பதும் அவரது கருத்து.

அறங்காவலர் நீக்கம் பற்றிய குற்றச்சாட்டு

ADVERTISEMENT

வேணு சீனிவாசனைத் தற்காலிகமாக அறங்காவலர் பதவியிலிருந்து நீக்கி, அறக்கட்டளையின் அமைப்பை மாற்றத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுவதையும் கம்பட்டா மறுத்துள்ளார். முக்கிய உண்மைகளை விட்டுவிட்டுத் தவறான பிம்பத்தை உருவாக்குவதாக அவர் இருவரையும் விமர்சித்துள்ளார்.

சந்திரசேகரன் மறுநியமனம்

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் செயல்பாடுகளில் தனக்குத் திருப்தி இருப்பதாகக் கம்பட்டா சொல்கிறார். ஆனால், செப்டம்பர் 17 அன்று நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவரது மறுநியமனம் கையாளப்பட்ட விதம் தனக்கு ஏமாற்றம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், டாடா சன்ஸைப் பட்டியலிட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அழுத்தமும் இந்த விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இந்த நிர்வாகப் போராட்டம் அடுத்து எந்தத் திசையில் போகும் என்பதைத்தான் எல்லோரும் உற்றுப் பார்க்கிறார்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel