மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐயும் பறிப்பதா? – விஜய் அரசுக்கு வலுக்கும் கண்டனம்

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Nov 2026, 11:08 AM

Vijay

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையாக, தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும், மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவோம் என்று விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன என நேற்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அவர் தனது எக்ஸ் பதிவில், “மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

எனவே, பயனாளிகளுக்கும் குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அதேபோல் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்,”சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு மகளிர் உரிமைத்தொகை முழுமையாக சென்றடையவில்லை என்ற தகவல் தெரியுமா?தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல; மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம்.

எனவே உடனடியாக அனைத்து பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவல்கள் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ” மகளிர் உரிமைத் தொகையாக, தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும், மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான தொகை, 14ம் தேதி, ஒரு கோடியே, 29 லட்சத்து, 97,568 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட, 17 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதம் பேர் நீக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, பல்வேறு அரசு துறைகளின் தரவுகளுடன், பயனாளிகளின் விபரங்கள் சரி பார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் வழக்கமான புதுப்பித்தல் பணி நடக்கிறது. இது திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே நடந்து வருகிறது.

அந்த வகையில் பயனாளிகளில் யாரேனும் இறந்தால், திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன்பெற தகுதியவற்றவர்களாக மாறி இருந்தால், அல்லது தாங்களாகவே திட்டத்தில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தால், அந்த விபரங்களின் அடிப்படையில், பயனாளிகள் பட்டியல் ஒவ்வொரு மாதமும், உரிய முறையில் புதுப்பிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில்,”தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், கடந்த 2025 டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் மூலம் இரண்டாம் கட்டமாக சேர்க்கப்பட்ட 16.94 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக் கடந்த மூன்று மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 1.31 கோடி பெண்கள் மாதந்தோறும் பயனடைந்து வந்த இத்திட்டத்தில், தற்போது லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வராமல் முடக்கப்பட்டிருப்பது விஜய் தலைமையிலான தவெக அரசின் ஏழைப் பெண்கள் மீதான அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில், “மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம்” எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமின்றி, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையையும் நிறுத்தித் தமிழகப் பெண்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தொடர்கதையாகிவிட்டது.

எனவே, தேர்தல் வாக்குறுதியை மீறி மகளிரை வஞ்சிக்கும் ஜோசப் விஜய் அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைத் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாகப் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் நிறுத்தப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கான ரூ.1,000 நிலுவைத் தொகையை எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையைக் காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel