போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்கிறது? – விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Nov 2026, 12:09 PM

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் போலீசார் நடத்திய வாகனத் தணிக்கையில் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பதிவில், “போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவினரே அடுத்தடுத்துப் பறிமுதல் செய்யும் நிலையில், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது? ‘வெறும் வாயில் வடை சுடுவதையும், விளம்பர வெறியில் ரீல்ஸ் வெளியிடுவதையும்’ நிறுத்திவிட்டு, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!

ADVERTISEMENT

சென்னை மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான கொடிய வகை ஹெராயின் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து, அது தொடர்பாக இருவரைக் கைது செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை இதே மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்திருந்த நிலையில், தற்போது தலைநகர் சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிலான போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அடுத்தடுத்துப் பறிமுதல் செய்து வரும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட திட்டத்தின்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது?

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடங்கி நாகப்பட்டினம் வரை போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பதுக்கலையும் கண்காணித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர்தான் அவற்றைப் பறிமுதல் செய்கிறார்கள் என்றால், 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 54 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம், 65 காவல் ஆய்வாளர்கள், 130 காவல் உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் எனப் பெரும் படையையே உருவாக்கியிருப்பதாகக் கூறப்படும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எதற்காக அமைக்கப்பட்டது? மக்கள் வரிப்பணத்தில் இத்தனை கோடி ரூபாய் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவின் செயல்பாடுதான் என்ன? என்ற கேள்விதான் தற்போது எழுகிறது.

ADVERTISEMENT

போதை மாத்திரைகள், ஊசிகள், சாக்லெட்டுகள் எனப் பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பட்டதாரி இளைஞர்கள் வரை பலரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் இத்தகைய போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ள வக்கற்ற தவெக அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அடாவடித்தனங்களையும் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதும் செய்தி ஆசிரியர்களை, ‘Virtual Warriors’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கட்சியினரை ஏவிவிட்டு Abuse செய்து கொண்டிருப்பது கேவலமான செயலாகும்.

எனவே, போதை ஒழிப்புப் பேரணிகள் நடத்துவது, சாலையெங்கும் விழிப்புணர்வுப் பதாகைகளை வைப்பது போன்ற வெறும் வாயில் வடை சுடும் விளம்பர நடவடிக்கைகளால் போதைப்பொருட்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையே சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், கடத்தலையும், பதுக்கலையும் வேரோடு ஒழிக்க, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel