விஜய் கட்சி மாஜி நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது.. சிக்கிய 137 கிலோ போதைப்பொருள்.. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட ‘ஷாக்’ தகவல்கள்!

Published On:

| By Mathi

TVK-Vijay-Nagai-Drug Case-DRI

நாகப்பட்டினத்தில் தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் இன்று (அக்டோபர் 18-ந் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் அண்மைக்காலத்தில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இதையடுத்து அக்டோபர் 16, 17 தேதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் 6 பெரிய பைகளில் வைக்கப்பட்டிருந்த 27 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

வெள்ளித் தகடுகளால் சுற்றப்பட்டிருந்த ஒவ்வொரு பொட்டலமும் சுமார் 5 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அவற்றில் அதிக வீரியம் கொண்ட மெத்தம்பெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படும் வெள்ளை நிறப் படிகப் பொருள் இருந்தது.

ADVERTISEMENT

மொத்தம் 137 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சட்டவிரோத சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போதைப்பொருளை நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் இருந்து படகுகள் மூலம் கொண்டு சென்று, நடுக்கடலில் வேறு படகுக்கு மாற்றி இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

போதைப்பொருள் கடத்தலுக்கு ஏற்பாடு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபருக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், போதைப் பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4 பேர் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்துவதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து, பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடத்தல் வலையமைப்பை இந்தச் சோதனையின் மூலம் கண்டுபிடித்துள்ளோம்.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share