சுரண்டி தின்னும் சிலர்.. கொடுத்த காசுக்கு மேல கூவி.. வம்புக்கு இழுத்தால்.. காங்கிரஸ், தவெகவை விளாசிய திமுக!

Published On:

| By Mathi

DMK-TVK-Congress

SIR விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆளும் தவெகவும் இரட்டை வேடம் போடுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன், “கூட்டணியில் இல்லாத திமுகவை இனியும் வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம்” என்று காங்கிரஸை திமுக எச்சரித்துள்ளது.

சென்னையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 17) நடைபெற்றது. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; மாணவர் போராட்டங்களுக்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது; தேர்தல் குளறுபடிகளுக்கு தீர்வு காண கோரி குடியரசு தலைவரிடம் மனு கொடுப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில், “இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் – த.வெ.க.வுக்குக் கண்டனம்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராகவும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R.-க்கும் எதிராகவும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டம் மாபெரும் எழுச்சியை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசால் இத்தனை ஆண்டுகளாகச் செய்ய முடியாத ஒன்றை இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திக் காட்டியுள்ளதைக் கண்டு அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சி, முதலில் விலகி நின்று வேடிக்கை பார்த்ததை நாடறியும். பின்பு, அதற்குப் பெருகும் ஆதரவினால் வேறு வழியில்லாமல் அவர்களது போராட்டத்தில் இணைந்து ஆதரிப்பதாகத் தற்போது காட்டிக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

ADVERTISEMENT

அடுத்தவர் உழைப்பைத் திருடித் தின்பதும், பிறர் முதுகில் சவாரி செய்துவிட்டு முதுகில் குத்துவதும் காங்கிரஸ் கட்சியின் பிறவிக் குணம் என்பதைக் கடந்தகால அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். எனவே இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால், இந்திய அளவில் S.I.R.ஐ எதிர்ப்பதாக நாடகமாடும் காங்கிரஸ் கட்சி, கேரளம் மற்றும் தமிழ்நாடு குறித்துப் பேச மறுப்பது இரட்டை நிலைப்பாடு ஆகும். S.I.R.-இல் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாடு என மாற்றுவது இரட்டை வேடமே.

குறிப்பாகத் தமிழ்நாட்டில், அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் எல்லாம் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதை ’பிசினஸ் லைன்’ நாளேடு புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டிச் செய்தி வெளியிட்ட பின்னரும், தமிழ்நாட்டில் எல்லாம் சரியாக நடைபெற்றுள்ளது என அவர்கள் கூறி வருவது பச்சையான, அருவருப்பான சந்தர்ப்பவாதம் ஆகும். அதிலும், காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே த.வெ.க.விடம் சுரண்டித் தின்னும் ஒருசிலர், ‘கொடுத்த காசுக்கு மேல் கூவி’ வருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

ஒருபுறம், த.வெ.க.வைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் “S.I.R.-ஐ எதிர்க்கிறோம் என்றும், S.I.R. இல்லாமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளை வென்றிருப்போம்” என்றும் பேசி வருகின்றனர். நேற்று முன்தினம் த.வெ.க.வுடன் ஒரே மேடையில் நின்று போராட்டம் நடத்திய ஜனநாயக சக்திகள், அக்கட்சித் தலைவர் விஜய் இதுவரை S.I.R. குறித்தோ ஞானேஷ் குமாரைப் பதவிநீக்குவது குறித்தோ பேச மறுப்பது, தேர்தல் ஆணையம் நியமித்த தலைமைச் செயலாளருக்குத் த.வெ.க. அரசில் பணி நீட்டிப்பு வழங்கப்படுவது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாட்டுக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது ஆகிய அனைத்தும் திரைமறைவில் நடைபெறும் நேர்மையற்ற ‘திருட்டு அரசியல்’ காரணமாகத்தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும்.

S.I.R. குறித்து கழகத்தை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூட்டாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விஜய் ஏன் இணையவில்லை எனக் கேட்கவில்லை. காங்கிரசின் ஆதரவை வாங்கிக் கொண்டு, பா.ஜ.க.வுடன் இரகசிய உறவில் இருக்கும் த.வெ.க.வைக் கண்டிக்கத் துப்பில்லாத காங்கிரஸ் கட்சி தி.மு.க. மீது குற்றம் சுமத்துவது நகைப்புக்குரியது.

S.I.R. குறித்து தேர்தலுக்குப் பிறகு எதையும் பேசாத விஜய் அவர்கள் இந்தியா கூட்டணியின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் போராட்டத்திலும் எங்கேயும் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில் த.வெ.க.வில் இருந்து, ஊரை ஏமாற்ற ‘ஒற்றை மனிதராய்’ கண்துடைப்புக்காக வந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகனின் வாயில் இருந்தும் ‘பா.ஜ.க.’ என்றோ, ‘தேர்தல் ஆணையம்’ என்றோ, ‘ஞானேஷ் குமார்’ என்றோ தப்பித் தவறியும் வரவில்லை என்பதை நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படி தொடர்ந்து இரட்டை வேடும் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இக்கூட்டம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன், கூட்டணியில் இல்லாத கழகத்தை இனியும் வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது. இவ்வாறு திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share