ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்க.. தேர்தல் குளறுபடிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் மனு- திமுக தீர்மானம்

Published On:

| By Mathi

DMK-SIR-Gyanesh Kumar

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பது என்றும் சென்னையில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ADVERTISEMENT

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்

முதன் முதலில் S.I.R. தொடங்கப்பட்ட பீகார் மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அங்குப் பெருமளவில் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படும் செய்திகள் வந்தபோதே, 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதனைக் கண்டித்துக் குரல் எழுப்பியவர் நம் கழகத் தலைவர் அவர்கள். மேலும், இதனைக் கண்டித்து பீகாரில் “Voter Adhikar Yatra” என்ற பெயரில் நடைபெற்ற வாக்காளர் அதிகாரப் பயணத்திலும் அன்றைய முதலமைச்சரும் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். கழகத் துணைப் பொதுச் செயலாளரும் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களும் உடன் இருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் “S.I.R. – சிறப்பு தீவிரத் திருத்தம்” என 27.10.2025 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் “சதி வலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்கத் தயாராகி விட்டது பா.ஜ.க.” எனச் சுட்டிக்காட்டி போர்க்கொடி உயர்த்தியவர் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் என்பதை இக்கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

ADVERTISEMENT

“பருவமழை மற்றும் பண்டிகைக் காலமான நவம்பர், டிசம்பரில் SIR பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது” என்பதோடு, “வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; வாக்குத் திருட்டை முறியடிப்போம்” எனவும், “இந்த ஜனநாயக படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்” எனவும் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிலேயே மிகத் தீவிரமான ஆவேசக் குரல் எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே, தேர்தல் ஆணையத்தை தட்டிக் கேட்ட அரசியல் கட்சித் தலைவரும், மாநிலத்தின் முதலமைச்சரும் நம் தலைவரே ஆவார். நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர்கள் SIR மூலம் வாக்குரிமையைப் பறிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்கள்.

“தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்” என இரண்டாவது கட்டமாக SIR-ஐத் தேர்தல் ஆணையம் அறிவித்த 6 நாட்களில், தமிழ்நாட்டில் 2.11.2025 அன்று கழகத் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, “பீஹாரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் குளறுபடிகளைக் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். கொண்டு வருவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகும்” எனவும், “தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிடத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது” எனவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றியதும் திமுகதான்!

ADVERTISEMENT

வழக்கு தொடுத்ததோடல்லாமல், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என மாமல்லபுரத்தில் பிரமாண்டமான பயிற்சிக் கூட்டத்தைக் கழக நிர்வாகிகளுக்கு நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்களால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பறிபோய் விடக் கூடாது எனத் தி.மு.க.வை முழு வீச்சில் களத்தில் இறக்கி விட்டுச் செயல்பட வைத்ததையும் யாரும் மறுக்கவோ முடியாது. மறைக்கவோ முடியாது.

“ஏன் SIR-ஐ எதிர்க்கிறோம்?” என 9.11.2025 அன்று காணொலி மூலம் கழகத் தலைவர் அவர்கள் விரிவாக விளக்கி, இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிராக அனைவரையும் ஒருமுகமாகத் திரட்டி, களத்தில் நிற்க வைத்து, 11.11.2025 அன்று மாநிலம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக!

இதற்கிடையே, S.I.R. காரணமாகப் பெருமளவில் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தில் 2025-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, நவம்பர் 15 அன்று மிக ஆழமான ஒரு கருத்தினைக் கழகத் தலைவர் அவர்கள் பதிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தால் அங்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நிகழ்ந்த பிரச்சினைகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை விட்டே வெளியேறித் தனியாகப் போட்டியிட்டது, பல தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் என ஒரே கூட்டணியைச் சேர்ந்தோர் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் களம் கண்டது ஆகியவற்றைக் குறிப்பாலுணர்த்தி, காங்கிரஸ் இவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டுமென அதில் அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால், இவை எதுவுமே தேர்தல் ஆணையம் செய்த தவறுகளை நியாயப்படுத்தி விட முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துபோய் உள்ளதாகவும் கழகத் தலைவர் அவர்கள் அதே பதிவில் மிகக் கடுமையாகத் தேர்தல் ஆணையத்தைச் சாடியிருந்ததை நினைவூட்டுவது தற்போதைய அரசியல் சூழலில் அவசியமாகிறது.

பீகாரில் நடந்தது தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாதெனக் கழகச் செயல்வீரர்கள் இயன்றவரை உழைத்தும், பல பேரின் வாக்குரிமை பறிபோனது. இவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வருபவர்களின் பெயர்களே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. இதுவே தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது.

எனவே, மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, இத்தகைய அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மாணவர் இயக்கங்களின் போராட்டங்களுக்குத் தி.மு.க. ஆதரவு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் மாறுபட்ட கருத்துகளைப் புறந்தள்ளி, அவர்களுக்கு விவரங்களைத் தெரிவிக்காமலும் தன்னிச்சையாகவும் ஒத்திசைவு இல்லா முடிவுகளைப் பல நேர்வுகளில் எடுத்தது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 23 செப்டம்பர் 2026 அன்று விரிவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டது. அதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து முதல் கண்டன அறிக்கை கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்துதான் வந்தது. அரசியல் சட்டத்தை மதிக்காமல் தனியாவர்த்தனம் செய்து, அதிகார வரம்பு மீறல் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் உறுதிபட அவ்வறிக்கையில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகக் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் பிற மாணவர் இயக்கங்களும் அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு டெல்லி மாநிலத்தின் அனைத்து வாயில்களையும் பூட்டி வைத்ததையும், மாணவர்களின் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவி விட்டதையும் கழகத் தலைவர் அவர்கள்தான் உடனடியாகக் கண்டித்தார்.

மேலும், அதே நாளில், முன்னாள் முதலமைச்சர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், பிணராயி விஜயன், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்கார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், “இது என்ன அறிவிக்கப்படாத நெருக்கடிநிலையா” எனக் கண்டனம் தெரிவித்தார். சென்னையிலும், போராடிய மாணவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்து அடைத்து வைத்தபோது, கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. இராசா மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மாணவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்தே காவல்துறையினர் இளைஞர்களை விடுவித்தனர்.

அக்டோபர் 14 அன்று, கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கும் தனது கண்டனத்தைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவுசெய்தார். இதற்கு, அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., டெரெக் ஓபிரையன், உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டனர். நேற்று கூட, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, S.I.R. இரத்து செய்யப்பட வேண்டுமென்பதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென்பதிலும் கழகத்தின் நிலைப்பாடு தெளிவானது; உறுதியானது; நிலையானது. இதற்காக ஜனநாயகச் சக்திகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், ‘முதுகு குத்தி’யான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நடவடிக்கையிலும் பங்கேற்க இயலாது என்பதையும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதை இக்கூட்டம் மீண்டும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளது.

தேர்தல் குளறுபடிகளைத் தீர்க்கக் கோரிக் குடியரசுத் தலைவரிடம் மனு

உலகின் மிகப்பெரும் ஜனநாயகமாகத் திகழும் இந்தியாவில் தேர்தல்களின் மீதான நம்பிக்கை மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமானதாக மாறி வருகிறது.

எனவே,

அ) அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்டு, திட்டமிட்டு வாக்காளர்களை நீக்க வழிசெய்த S.I.R. முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும். S.I.R.-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனி வரும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மக்களின் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கான நடைமுறையாக இருக்க வேண்டுமே தவிர, வாக்குரிமையைப் பறிக்கும் சதி ஆயுதமாக மாற்றப்படக் கூடாது. போதுமான கால அவகாசமும், வாய்ப்புகளும் தரப்பட்டே இனி அப்படிப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆ) நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. EVM-களில் பதிவான வாக்குகளுக்கும் VVPAT ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பது தொடர்ந்து பல இடங்களில் கண்டுபிடிக்கப்படுவது இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான், VVPAT ஸ்லிப்புகள் முழுமையாக எண்ணப்பட வேண்டுமெனத் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

இ) மேற்சொன்ன இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி, கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என இக்கூட்டம் முடிவு செய்கிறது. இவ்வாறு திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share