நாகையில் தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத்தம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை ‘ஒழிப்பு’ பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை ‘ஒளிப்பு’ எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
“பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்” என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் ” தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற த.வெ.க. நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
‘முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், ‘முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு’ என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்?
ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?
இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
