135 கிலோ போதைப்பொருளுடன் தவெக நிர்வாகி கைது- சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கூடாரமா? – நயினார் நாகேந்திரன்

Published On:

| By Mathi

Vijay Nainar

தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம், சர்வதேச போதைப் பொருள் மாஃபியா கூடாரமா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நடத்திய அதிரடிச் சோதனையில், இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்ற கொடிய ரசாயனப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தவெகவின் முக்கிய நிர்வாகியே சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் சிக்கியிருப்பது, இக்கட்சி போதை மாஃபியாக்களுக்குப் புகலிடமாக மாறியுள்ளதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்ஸ்’ என்ற பெயரில் ஓட்டப்பந்தயத்தை நடத்தி, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்துத் தன்னை ஒரு போதை ஒழிப்புப் போராளியாக முதலமைச்சர் விஜய் விளம்பரப்படுத்தியிருந்த நிலையில், இன்று அவரது சொந்தக் கட்சிக்காரரே 135 கிலோ கொடிய போதைப்பொருளுடன் கையும் களவுமாகச் சிக்கியிருப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!

ADVERTISEMENT

மாநிலக் காவல்துறையில் பல பிரிவுகள் இருக்கும் நிலையில், மத்திய அரசின் டிஆர்ஐ (DRI) அதிகாரிகள் தலையிட்டுத்தான் இந்த மாபெரும் சர்வதேசக் கடத்தலை முறியடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருள் கடத்தல் பணத்தில் கொழுத்த தவெக-வின் பெருந்தலைகள் யார் என்பது குறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்; மேடையில் ஒரு வேஷமும், நிஜத்தில் போதை மாஃபியாக்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அரசின் கபட நாடகத்தை ஒட்டுமொத்தத் தமிழக மக்களும், தாய்மார்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்! இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share