இஸ்லாம் மதத்துக்கு மாறியோருக்கு இட ஒதுக்கீடு- சட்ட திருத்தம் நிறைவேற்ற திருமாவளவன் கோரிக்கை

Published On:

| By Mathi

Muslim-Reservation

இஸ்லாம் மதத்துக்கு மாறியோரும இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிய சட்ட திருத்தத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதின் காரணமாக அவர் அதற்கு முன்பு பெற்று வந்த இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரான தீர்ப்பாகும். இஸ்லாம் மதத்தைத் தழுவியோர் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக சட்டத் திருத்தம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் இந்து பெற்றோர்களுக்கு பிறந்தவராவார். அவர் 2015 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதற்கான சான்றிதழை சுன்னத் ஜமாத் அமைப்பு வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் தன்னை ‘முஸ்லிம் லெப்பை’ சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் வழங்குமாறு வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார். அதை அவர் நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக அவர் தொடர் ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையையே ரத்து செய்துவிட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறிய பின்னர் உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான சான்றிதழைப் பெறலாம் என 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த அரசாணையைத்தான் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து தற்போதைய தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.

ADVERTISEMENT

“மார்ச் 2024-ல் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையில் உள்ள அடிப்படை குறைபாடு என்னவென்றால், ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு வரலாற்று ரீதியாக இருந்த பின்தங்கிய நிலையை, வேறொரு மதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ‘பின்தங்கிய வகுப்பு’ (Backward Class) பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்கான போதுமான ஆதாரமாகக் கருதியதே ஆகும்” என்று நீதிபதி மிஸ்ரா தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஒரு இந்து, ‘பின்தங்கிய வகுப்பு’ (Backward Class), ‘மிகவும் பின்தங்கிய வகுப்பு’ (Most Backward Class), ‘ சீர் மரபினர்’ (De-notified Community) அல்லது ‘பட்டியல் சாதி’ (Scheduled Caste) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும்போது, ​​அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஏழு ‘பின்தங்கிய முஸ்லிம்’ சமூகங்களில் ஏதோ ஒன்றின் உறுப்பினராக எப்படி மாற முடியும் என்பதற்கான விளக்கத்தை அந்த அரசாணை வழங்கவில்லை” என்று நீதிபதி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி , ஒரு நபரின் ‘பட்டியல் சாதி’ (Scheduled Caste) அந்தஸ்தை, மாநில அரசின் நிர்வாக ஆணை மூலம் மாற்றவோ அல்லது புதிதாக உருவாக்கவோ முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘பட்டியல் சாதி’ அந்தஸ்து என்பது இந்திய அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது; இதன்படி, ஒரு குழுவை ‘பட்டியல் சாதி’ என அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு.
1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின் பத்தி 3-ன் படி, இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் ஒரு நபர் ‘பட்டியல் சாதி’ உறுப்பினராகக் கருதப்பட மாட்டார் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. “எனவே, பத்தி 3-ல் குறிப்பிடப்படாத ஒரு மதத்திற்கு மாறும்போது, ​​ஒருவர் தனது பிறப்புச் சாதியைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து ‘பட்டியல் சாதி’ அந்தஸ்தைக் கோர முடியாது. அதன் விளைவாக, அத்தகைய மதத்திற்கு மாறும்போது, ​​அந்த நபர் ‘பட்டியல் சாதி’ அந்தஸ்தை இழந்துவிடுகிறார்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை நீக்கி சட்டத் திருத்தமொன்றைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share