ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில், அணிவகுப்பு பேரணி நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஆர்எஸ்எஸ் நிறுவன நாளை முன்னிட்டு, பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
அக்டோபர் 18, 25 அல்லது நவம்பர் 1 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அமைதி பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கான நேரம் வழித்தடங்கள் ஆகியவற்றை அக்டோபர் 19ஆம் தேதிக்குள் காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
விஜயதசமிக்கு முந்தைய நாளான அக்டோபர் 25, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
