தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தவறான செயல் என்றாலும், அதைத் தேர்தல் முறைகேடாகக் கருதி வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் கே.சிவக்குமார் 85,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், திமுக சேலம் மத்திய மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரன் 71,676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
சிவக்குமாரின் வெற்றியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சிவக்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அக்டோபர் 15-ந் தேதி வழங்கிய 36 பக்கத் தீர்ப்பில், விஜய்யின் தேர்தல் பிரசாரம், குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்கள், பெற்றோரின் வாக்களிக்கும் உரிமை, தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ஆகியவை குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

Kinder Joy சாக்லேட் கேட்பது போல ஓட்டு கேளுங்கள்..
தீர்ப்பின் 6-வது பக்கத்தில், ஏப்ரல் 21-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விஜய் பேசியது குறித்து மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்துள்ளார்.
குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் Kinder Joy சாக்லேட் கேட்டு எப்படி அடம்பிடிப்பார்களோ, அதேபோல தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பெற்றோரிடம் அடம்பிடிக்க வேண்டும் என்று விஜய் பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. ‘விஜய் மாமாவுக்காக இதைச் செய்யுங்கள்’ என்று குழந்தைகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பாசத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களின் முடிவை மாற்ற முயன்றதாக ராஜேந்திரன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. விஜய்யின் பேச்சுக்குப் பிறகு குழந்தைகள் தங்களது குடும்பத்தினரிடம் தவெகவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாணம் வீசுவேன்.. விஷம் வைப்பேன்.. தற்கொலை செய்வேன்!
தீர்ப்பின் 7-வது பக்கத்தில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் குறித்து மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தவெகவுக்கு வாக்களிக்காவிட்டால் பெற்றோர் மீது மாட்டுச் சாணத்தை வீசுவதாக ஒரு சிறுவன் மிரட்டியதாகவும், தந்தையின் உணவில் விஷம் கலப்பதாக ஓர் இளம்பெண் மிரட்டியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தாத்தா, பாட்டி விசில் சின்னத்துக்கு வாக்களிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு குழந்தை மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்பத்தினரை அடிப்பது, செல்போன் மற்றும் கண்ணாடிகளை உடைப்பதாக மிரட்டுவது போன்ற காட்சிகளும் வீடியோக்களில் இடம்பெற்றதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். குழந்தைகளைப் பயன்படுத்தி பெற்றோரின் மனதை மாற்ற முயன்றது தேர்தல் முறைகேடு என்றும், இதனால் சிவக்குமாரின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தலாமா?
தீர்ப்பின் 25 முதல் 28-வது பக்கங்கள் வரை, தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவுகளை நீதிபதி ஆய்வு செய்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குழந்தைகளைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது அதன் நோக்கம்.
இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியதாகக் கூறப்படுவதாலேயே ஒரு வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்ய முடியாது. தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்கள் இருக்க வேண்டும் என்று நீதிபதி விளக்கியுள்ளார்.

விஜய் பேச்சுக்கு வேட்பாளர் பொறுப்பா?
தீர்ப்பின் 30-வது பக்கத்தில், விஜய் பேசியதை வைத்து சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வியை நீதிபதி ஆய்வு செய்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளரின் தேர்தல் வெற்றியை முறைகேடு காரணமாக ரத்து செய்ய வேண்டுமானால், அந்த முறைகேட்டை வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் செய்திருக்க வேண்டும். அல்லது அவர்களது ஒப்புதலுடன் மற்றொருவர் செய்திருக்க வேண்டும்.
இந்த வழக்கில் விஜய் குழந்தைகளிடம் பேசியது, சேலம் வடக்கு தொகுதி வேட்பாளர் சிவக்குமார் அல்லது அவரது தேர்தல் முகவரின் ஒப்புதலுடன் நடந்ததாக மனுவில் போதுமான விவரங்கள் இல்லை. ஒரு கட்சியின் தலைவர் பொதுவாக விடுத்த வேண்டுகோளை மட்டும் வைத்து, அந்தக் கட்சியின் வேட்பாளர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருத முடியாது என்று நீதிபதி விளக்கியுள்ளார்.

குழந்தைகளை வைத்து ரீல்ஸ் எடுத்தது யார்?
தீர்ப்பின் 34-வது பக்கத்தில் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் குறித்து நீதிபதி பரத சக்கரவர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்தப் பக்கத்தில், “ “Adults have shown these children the appeal of the leader, made them perform the acts, made reels, and popularised them.”
அதாவது, சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் மிகச் சிறிய குழந்தைகள் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழந்தைகளிடம் சொந்தமாக செல்போன்கள் இல்லை. அவர்களால் தாங்களாகவே ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கவும் முடியாது. பெரியவர்கள்தான் அரசியல் கட்சித் தலைவரின் வேண்டுகோளைக் குழந்தைகளுக்குக் காட்டி, அவர்களை அவ்வாறு பேசவும் செயல்படவும் வைத்து வீடியோக்களை எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்” என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, “The entire act of involving tender children is in bad taste, and the tasks they were allowed to perform reflect poor parenting; making reels out of it is cheap and politically motivated.”
அதாவது, சிறு குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்தியதே ரசிக்கத்தக்கதாக இல்லை. குழந்தைகளை இப்படி நடந்துகொள்ள அனுமதித்த பெற்றோர்கள் செய்ததும் தவறு. குழந்தைகளை வைத்து ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்தது மலிவான, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்” என்று நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
குழந்தைகளை அரசியலுக்காக இப்படிப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டுமா, இதுபோன்ற செயல்களை ஒரு வேட்பாளரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான காரணமாகச் சட்டத்தில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து நாடும் நாடாளுமன்றமும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் சொன்னால் பெற்றோர் ஓட்டு போடுவார்களா?
தீர்ப்பின் 33 முதல் 35-வது பக்கங்கள் வரை, குழந்தைகள் பெற்றோரின் முடிவுகளில் எந்த அளவுக்குச் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை நீதிபதி விரிவாக ஆய்வு செய்துள்ளார்.
பெற்றோர் குழந்தைகளின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதைப் போலவே, குழந்தைகளும் பெற்றோரின் முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்தான். குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளைத் தெய்வமாகப் பார்க்கும் வழக்கமும் இருக்கிறது. முருகன், விநாயகர் போன்ற கடவுள்களின் குழந்தை வடிவங்களை வழிபடுவதையும், சிவபெருமானுக்கே முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கியதாகக் கூறப்படும் புராணக் கதையையும் நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் பெற்றோரிடம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டால், அது அவர்களது முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் குழந்தைகளின் பேச்சைக் கேட்டு பெற்றோர் வாக்களிப்பதை மட்டும் தேர்தல் முறைகேடாகக் கருத முடியுமா என்பதுதான் இந்த வழக்கின் முக்கியமான கேள்வி என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மூலம் குடும்பப் பாசத்தையும் உணர்வுகளையும் பயன்படுத்தி வாக்காளர்களின் முடிவை மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் அதனால் பெரியவர்களின் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையே பறிக்கப்பட்டுவிட்டதாகக் கருத முடியாது. குழந்தைகள் வற்புறுத்தியதால் பெற்றோர் ஒரு கட்சிக்கு வாக்களித்திருந்தாலும், அது அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கும் என்று நீதிபதி விளக்கியுள்ளார்.
ஒருவரது மனதையே கட்டுப்படுத்தி, அவரால் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தினால்தான் அது முறையற்ற செல்வாக்கு (Undue Influence) என்று கருதப்படும். குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடிப்பதை மட்டும் அந்த அளவுக்கான மிரட்டலாகவோ கட்டாயப்படுத்துதலாகவோ கருத முடியாது. எனவே குழந்தைகளின் வற்புறுத்தலை மட்டும் வைத்து வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டதாக முடிவு செய்ய முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வழக்கு தள்ளுபடி
தீர்ப்பின் 35-வது பக்கத்தில், குழந்தைகளை வைத்து பெற்றோரை வற்புறுத்தியதாக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று எடுத்துக்கொண்டாலும், அதை மட்டும் வைத்து தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என்று நீதிபதி முடிவு செய்துள்ளார்.
குழந்தைகளை அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தியதை நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை. அதைத் தவறான செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால் ஒரு செயல் தவறானது என்பதும், அந்தச் செயலைக் காரணமாக வைத்து தேர்தல் வெற்றியை ரத்து செய்யச் சட்டத்தில் இடம் இருப்பதும் வெவ்வேறு விஷயங்கள் என்பதை நீதிபதி விளக்கியுள்ளார்.
இதையடுத்து, தவெக எம்.எல்.ஏ. சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
