தமிழக முதல்வர் விஜய்யின் கேரள பயணம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024 நவம்பர் 6-ஆம் தேதி பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் புத்தகங்கள் வைக்கும் வசதி, டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையத்தில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள், ஆராய்ச்சி படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, கோவை விமான நிலையத்திலிருந்து முதல்வர் ஜோசப் விஜய், சாலை ஊர்வலமாக காந்திபுரம் வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மரியாதை ஏற்றுக்கொண்ட முதல்வர், பெரியார் சிலை மற்றும் அறிவுலகம் கல்வெட்டை திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பெரியார் அறிவுலகம் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நவீன வசதிகள் மற்றும் நூலகங்களை முதல்வர் பார்வையிட்டார்.
இதனை அடுத்து நடைபெற்ற அரசு விழாவில், 408 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 32 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,343 பயனாளிகளுக்கு 34 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, முதல்வர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்லதிட்டமிட்டிருந்ததார்.பி ஆர் எஸ் மைதானத்தில் ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. ஆனால் நூலகம் திறப்பு விழா முடிவடைந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் கனமழை கொட்டியது.
இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய்யை பார்க்க வந்த தொண்டர்கள் கனமழையில் நனைந்து நிற்கும் நிலை உருவானது.
இந்நிலையில் கனமழை காரணமாக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட கேரள திரிச்சூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மழையின் போது முதலமைச்சர் விஜயின் ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதாக இருக்காது எனக் கூறி அதிகாரிகள் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் விஜயின் திருச்சூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3.30க்கு சிறப்பு விமானத்தில் சென்னை கிளம்ப உள்ளார்.
கேரளாவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் விஜய்க்கு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
