கவர்ச்சி அரசியல் செய்யும் நீர்க்குமிழி அல்ல அதிமுக – எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட அதிமுக, காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வரும், பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு மடல் ஒன்றை எழுதி உள்ளார்.

ADVERTISEMENT

அதில், “என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே! இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற பிறகு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய காலகட்டத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் நம் போறிஞர் பெருந்தகை அண்ணா!

மாநில உரிமைகளை உயர்த்திப் பிடித்து சமூக நீதியை நிலைநாட்டி, சாமானிய மக்களின் நலனைக் காக்கும் நல்லரசை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு அவர் உருவாக்கிய இயக்கத்தைக் கபளீகரம் செய்து அண்ணாவின் இதயக்கனியாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது தீய சக்தி

ADVERTISEMENT

அந்தத் தீய சக்தியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், அண்ணாவின் இலட்சியங்களை நிலைநாட்டவும்; கோடானு கோடி மக்களின் பேராதாவோடு, 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் நாள் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கினார் நம் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர்! 1977-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நம் கழகம் புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது.

புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா, தொட்டில் குழந்தைத் திட்டம், 69 விழுக்காடு இடஒதுக்கிட்டிற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அம்மா உணவகம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் என எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி, அமைதி! வளம்! வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தின்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்கள்.

ADVERTISEMENT

புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு, நம் கழகத்தைச் சூழ்ந்த சோதனைகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் மத்தியில் உங்களின் பேராதரவோடும், தமிழக மக்களின் நம்பிக்கையோடும், முதலமைச்சராகப் பதவியேற்று அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தப் பதவியை மக்கள் பணியாற்றக் கிடைத்த மகத்தான வாய்ப்பாகக் கருதி, புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை விரிவாக்கப் பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் என தமிழகத்தின் வளர்ச்சிக்காக நாம் தொடங்கிய பல்வேறு திட்டங்களுக்கு, இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது பெயரை ஒட்டிக்கொண்டு உரிமை கொண்டாடும் அளவிற்கு, நம் கழக ஆட்சியில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டினோம்! அதற்குச் சான்றாகத்தான், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அசாதாரணமான அரசியல் சூழலிலும், கவர்ச்சி அரசியலின் மாயத் தோற்றங்கள் மேலோங்கிய நிலையிலும், அவற்றையெல்லாம் கடந்து கழகக் கூட்டணி சுமார் ஒரு கோடியே முப்பத்தைந்து இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றதுடன், நம் கழகம் 47 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்து, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது!

கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட நம் கழகம், காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம் ! கவர்ச்சி அரசியலால் மக்களை ஏமாற்றி, குதிரை பேர அரசியலின் துணையோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளியதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என, சாதாரண மக்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சரோ, வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதத்திலும் வினோதம்!

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுகிறது! ஏழை, எளிய மக்களும், நடுத்தரக் குடும்பங்களும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே திண்டாடுகிறார்கள்! தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவு கொடுக்கப்படுகின்றன!

ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது!

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவ்வாறு பலவீனப்படுத்தலாம்; அதன் சட்டமன்ற உறுப்பினர்களை எவ்வாறு குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம்; நம் இயக்கத்தை எவ்வாறு விழுங்கிவிடலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்! அவர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!

நம் கழகம் அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமல்ல! அது இலட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்! நம் தொண்டர்கள் புரட்சித் தலைவரின் பாசறையில் பயின்றவர்கள்! புரட்சித் தலைவி அம்மாவின் அரசியல் போர்க்களத்தில் புடம் போடப்பட்டவர்கள்! எத்தனை சோதனைகள் வந்தாலும் துவளாதவர்கள்! எத்தனை சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் வீழாதவர்கள்!

அத்தகைய இலட்சிய உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக, உங்களின் பேரன்பையும் பெருநம்பிக்கையையும் பெற்றுத்தான், இன்று இந்த மாபெரும் மக்கள் பேரியக்கத்தின் ‘பொதுச் செயலாளர்’ எனும் பெரும் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருகிறேன்! எனக்கு கழகம் வேறு; தொண்டர்கள் வேறு அல்ல! கழகமே எனது உயிர்மூச்சு! கழகத் தொண்டர்களே எனது உயிர்நாடி!

என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே! புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மாவின் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்! மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்! தர்மம் வெல்லும்! தீய சக்திகள் வீழும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share