அனைவரும் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது : சசிகலா

Published On:

| By Kavi

இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதிமுகவை காப்பாற்றுவது கடினமாகிவிடும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கூறியுள்ளார்.

1972ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

வரும் அக்டோபர் 17ஆம் தேதி 55ஆவது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது.

அன்றைய தினம் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

1972ஆம் ஆண்டு புரட்சித்தலைவரால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள் தான்,நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள்.

அம்மா மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும் தான் இன்று வரை சந்தித்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி இருவரின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும். பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.

“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.

இந்த இயக்கம்,ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share