சில அரசியல் கட்சியைச் சேர்ந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களைக் குடோன்களில் பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. எல்லா அட்டைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் தடையில்லாமல் எல்லா நேரங்களிலும் வழங்கி வருகிறோம். அமுதம் அங்காடி மற்றும் கூட்டுறவு கடைகளில் பொன்னி புழுங்கல் அரிசி ரூ.60 ரூபாய்க்கு வழங்குகிறோம். பச்சரிசி ரூ. 46 கிடைக்கிறது. வெளிக்கடைகளில் ரூ.75 முதல் ரூ.85 வரை இருக்கும் நிலையில், நமது அமுதம் அங்காடிகளில் ரூ. 60 க்கு வழங்குகிறோம்.
இன்று காலையில் கூட முன்னாள் முதல்வர், ‘விலைவாசி உயர்வை யாரும் கவனிக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் எல்லா குடோன்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். துவரம்பருப்பு ரூ. 130க்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக, அரிசி விலையில் கர்நாடகா பொன்னி, ஆந்திரா பொன்னி அரிசிகளின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.
2022-ல் அரிசி விலை கிலோவுக்கு ரூ.47-க்கும், 2023-ல் ரூ.53-க்கும், 2024-ல் ரூ.60-க்கும், 2025-ல் ரூ.62-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், துவரம்பருப்பு 2022-ல் ரூ.111-க்கும், 2023-ல் ரூ.148-க்கும், 2024-ல் ரூ.171-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. இதெல்லாம் முன்னாள் அமைச்சர்கள் கவனித்திருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள அமுதம் அங்காடிகளில் குறைந்த விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களைக் குடோன்களில் பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. உணவுப் பதுக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விலைவாசி கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
