வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் தாக்கல் செய்த மனு மீது இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பதிலளிப்பதற்காக, உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 15-ந் தேதி) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சவுகதா ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவின் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பாக 2025-ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்; வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்கள், நீக்கத்திற்கான காரணங்களை வாக்குச்சாவடி வாரியாக வெளியிட வேண்டும்; உரிய நோட்டீஸ் வழங்காமல் எந்த வாக்காளரின் பெயரையும் நீக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அனைத்து மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், இந்த வழக்கைத் தாக்கல் செய்தவர்களில் ஒருவருடைய செயல்பாடு குறித்தும் நாங்கள் விளக்கம் கேட்போம் என்று தெரிவித்தார். ஆனால், அவர் எந்த மனுதாரரைக் குறிப்பிட்டார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இந்த மனுவை ஏற்கெனவே நிலுவையில் உள்ள எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக இந்த விசாரணையில் எந்தத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
