மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தங்களது அரசியல் எதிரிகளை எஸ் ஐ ஆர் மூலம் பாஜக தோற்கடித்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்தியா கூட்டணி அணியில் சேர மாட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள், பாஜகவிற்கு பயப்படுகிறார்கள், என்றெல்லாம் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் பரப்பப்பட்டவரும் சூழலில், இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகளோடு கைகோர்க்கிறோம் என இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்றுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் பரிசீலனை செய்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் முன்வைத்து டெல்லியில் பத்து நாட்களாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி பிரியங்கா காந்தியின் எந்த அளவிற்கு துணிச்சலோடு போராடி கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரில் கண்டு வியந்து போனேன்.
அரசியல் காரணங்களுக்கான போராட்டமாக இல்லாமல், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என போராட்டம் நடக்கிறது. இவையெல்லாம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.” என்றார்
மேலும் அவர் பேசுகையில், “பாஜகவின் முகத்திரை கிழிந்துவிட்டது. அவர்களின் வெற்றி என்பது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதியின் விளைவு ஆகும். குறிப்பாக மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை குறி வைத்து அவர்கள் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். தென்னிந்திய மாநிலங்களில் அவர்களால் கைவரிசை காட்ட முடியாது; இங்கே அவர்களுக்கு எந்தவித வேரும் இல்லை. அவர்கள் அப்படிச் செய்தால், “பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றது” என்று காட்டினால் யாராலும் நம்ப முடியாது. தமிழகத்திலோ கேரளாவிலோ அவர்களால் எதையும் அசைக்க முடியாது என்ற அளவுக்கு, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ இம்மாநில மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
அதைவிட, அவர்கள் மத்திய இந்தியாவிலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் வெற்றி பெற்றால் போதும், அவர்களுக்கான தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும். அந்த அடிப்படையில் அவர்கள் இந்தக் கைவரிசையைக் காட்டி, தங்களுடைய அரசியல் எதிரிகள் அத்தனை பேரையும் சொல்லி வைத்தாற்போல் திட்டமிட்டு வீழ்த்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்; மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டுள்ளார்; தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், மேனாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டுள்ளார்; கேரளாவில் பினராயி விஜயன் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவு வந்தபோது என்னிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது நான் சொன்னேன், “இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் தன்னியல்பாக தோற்றவர்கள் என்று சொல்ல முடியாது; திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள், குறிவைக்கப்பட்டுள்ளார்கள்” என்ற கருத்தைப் பதிவு செய்தேன்.
எஸ்.ஐ.ஆர் (SIR) என்பது புதிதாக வந்தது அல்ல; ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுதான். ஆனால், ஞானேஷ்குமார் சங் பரிவார் சதித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அதைப் பயன்படுத்தி, அவர்களின் கொள்கை எதிரிகளை, அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்கு அதைப் பயன்படுத்தியுள்ளார். இதுதான் இன்று அம்பலமாகியுள்ளது. இதை அம்பலப்படுத்தியவர்கள் காங்கிரஸ்காரர்களோ அல்லது இடதுசாரிகளோ அல்ல; இதை அம்பலப்படுத்தியிருப்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் இரண்டு ஆணையர்கள் ஆவர்.
