தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அரிசி விலை உயர்ந்து வருகிறது. பொன்னி உள்ளிட்ட சில அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.90 வரை விற்பனையாகின்றன.
இதேபோல் கோதுமை மாவு, துவரம் பருப்பு, உளுந்து, பாசி பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்து வெளியாகி உள்ள பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) தனது எக்ஸ் பதிவில், “முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்..
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்!” என தெரிவித்துள்ளார்.
