நா.மணி
பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக நீதியுடன் கூடிய முன்னேற்றமே உண்மையான வளர்ச்சி!
1931-இல் பிறந்து, 2015-இல் தன் வாழ்க்கையை நிறைவு செய்து கொண்ட டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இன்றும் குழந்தைகளின் மனங்களில் வாழ்கிறார். அவர் மறைந்த பிறகு பிறந்த குழந்தைகள்கூட அவரது பிறந்த நாளையும் நினைவு நாளையும் அன்போடு கொண்டாடுகின்றனர். ஒரு மனிதர் மறைந்த பின்னரும் தலைமுறைகளைக் கடந்து நேசிக்கப்படுவது அவரது ஆளுமையின் மாட்சிமை.
குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பை அருகிலிருந்து காணும் வாய்ப்பை பெற்ற மனிதன் நான். 2009 ஆம் ஆண்டு தமிழ் நாடு அறிவியல் இயக்கம் நடத்திய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், சுமார் 8,000 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அந்த மாநாட்டை துவக்கி வைத்தார்.
அவர் பேசுவதற்காக அழைக்கப்பட்டபோது, எழுந்த ஆரவாரம் இன்னும் நினைவில் இருக்கிறது. மைக்கைப் பிடித்த அவர், சில நிமிடங்கள் கூட்டம் முழுவதையும் அன்புடன் பார்த்தார். குழந்தைகளின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உள்வாங்கிய அந்தத் தருணம், அவர் குழந்தைகளை எவ்வளவு நேசித்தார் என்பதற்கு எனக்குக் கிடைத்த நேரடிச் சாட்சி. இதனை வரிவாக வாசிக்க விரும்புவர்கள் 2021 அக்டோபர் 15ஆம் தேதியில் வெளியான மின்னம்பலம் கட்டுரையை வாசிக்கவும்.
அப்துல் கலாம் என்றதும் என் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள். குழந்தைகள் மீதான அவரது அளவற்ற அன்பு. அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தின் வழியாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும் என்ற அவரது கனவு. இங்கே அவரது மற்றொரு முக்கியமான கனவான இந்தியா 2020 தொலைநோக்குத் திட்டத்தைப் பரிசீலிக்க செய்வது.
இந்தியா 2020: கனவும் நனவின் நிலையும்

அப்துல் கலாமும் ஒய். எஸ். ராஜனும் இணைந்து எழுதிய India 2020: A Vision for the New Millennium என்ற நூல், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தது.
வறுமையற்ற இந்தியா; அனைவருக்கும் தரமான கல்வியும் சுகாதாரமும்; கிராமம்-நகரம் இடையிலான இடைவெளி குறைந்த சமூகம்; வேளாண்மை, தொழில், சேவைத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி; தொழில்நுட்பத் தற்சார்பு; உணவுப் பாதுகாப்பு; விவசாயிகளின் வருமான உயர்வு; மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்; ஊழலற்ற நிர்வாகம்—இவை அவரது கனவு இந்தியாவின் முக்கியக் கூறுகள்.
இந்தியா அந்தக் கனவை எட்டிவிட்டதா?

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, அணுசக்தி, டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வறுமையைக் குறைப்பதிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இவற்றை மறுக்க முடியாது. ஆனால், வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதைக் காட்டிலும், அதன் பலன் யாரைச் சென்றடைந்துள்ளது என்பதே முக்கியமான கேள்வி.
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறியிருக்கலாம். அதன் பலன்கள் கிராமப்புறங்களையும் அனைத்துச் சமூகப் பிரிவினரையும் சமமாகச் சென்றடைந்துள்ளனவா? பொருளாதாரம் வளர்ந்திருக்கலாம். அனைவருக்கும் கண்ணியமான வேலைவாய்ப்பும் தரமான கல்வியும் சுகாதாரமும் கிடைத்துள்ளனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே கலாமின் கனவு எந்த அளவுக்கு நனவாகியுள்ளது என்பதைத் தீர்மானிக்கும்.
வளர்ச்சியின் அளவுகோல் சமூக நீதியே!

இந்தியாவின் வளர்ச்சியை மதிப்பிடும்போது பட்டியல் சாதியினர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்துச் சமூகப் பிரிவினரின் நிலையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
மாநிலம் அல்லது மாவட்ட அளவிலான சராசரிப் புள்ளிவிவரங்கள் மட்டும் போதாது. வட்டாரம், கிராமம் என நுண்ணிய அளவில் பள்ளிச் சேர்க்கை, இடைநிற்றல், கல்வியின் தரம் ஆகியவற்றை ஆராய வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளையும் தனித்து மதிப்பிட வேண்டும்.
புதிய தொழில்நுட்பத் துறைகளில் உருவாகும் வேலைவாய்ப்புகள் அனைத்துச் சமூகப் பிரிவினரையும் சென்றடைகின்றனவா? நிலம், கடன், தொழில்முனைவு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் சம வாய்ப்புகள் உள்ளனவா? விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கிறதா? கிராமப்புறங்களில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகள் மேம்பட்டுள்ளனவா?
சுகாதாரத் துறையில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, தாய்-சேய் இறப்பு விகிதம், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு ஆகியவையும் மதிப்பிடப்பட வேண்டும். இத்தகைய குறியீடுகளே வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை வெளிப்படுத்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வது பொருளாதார வளர்ச்சி; அந்த வளர்ச்சியின் பலன் அனைவரையும் சென்றடைவது சமூக முன்னேற்றம். இரண்டும் இணைந்தால்தான் அது முழுமையான வளர்ச்சி.
2020 கடந்துவிட்டது; கனவு தொடர்கிறது!

இந்தியா 2020-இல் வளர்ந்த நாடாக மாறவில்லை என்பது உண்மை. அதேவேளையில், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது. எனவே, கலாமின் தொலைநோக்குத் திட்டத்தைத் தோல்வியடைந்த கனவாக ஒதுக்கிவிடவும் முடியாது. அது முழுமையாக நிறைவேறிவிட்டதாகக் கூறவும் முடியாது.
அதன் இலக்குகளை இன்றைய இந்தியாவின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாகப் பயன்படுத்த வேண்டும்.இந்தியா எப்போது வளர்ந்த நாடாக மாறும் என்பதைக் காட்டிலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்கிறதா, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவ வசதி கிடைக்கிறதா, இளைஞர்களுக்குக் கண்ணியமான வேலை கிடைக்கிறதா, சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு உள்ளதா என்பதே முக்கியம். அப்துல் கலாம் கனவு கண்ட வளர்ந்த இந்தியா என்பது உயர் வருமானம் கொண்ட நாடு மட்டுமல்ல; சமூக நீதி நிலவும், சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படும், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் நாடு.
கனவைச் செயலாக்குவதே உண்மையான அஞ்சலி

அப்துல் கலாமின் பிறந்த நாளை (இன்று – அக்டோபர் 15) முன்னிட்டு, நல்லோர் வட்டம் என்ற அமைப்பு ஈரோட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரம் பேர் ஒன்றுகூடி, நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, எதிர்காலச் செயல்பாடுகளுக்கான முடிவுகளை எடுக்கவுள்ளனர். பல ஆளுமைகள் அதில் இணைகிறார்கள். சமூக மாற்றத்திற்கான செயல்திட்டங்கள் பற்றி திட்டமிட உள்ளார்கள்.
கலாமின் கனவு நிறைவேற்றம் அடைவதில் கல்வி நிறுவனங்கள், அறிவியல் அமைப்புகள், சமூக இயக்கங்கள், குடிமைச் சமூகம், இளைஞர்கள் என அனைவருக்கும் அதில் பங்குண்டு. அப்துல் கலாம் மறைந்துவிட்டார். ஆனால் அவரது கனவு முற்றுப் பெறவில்லை.
இந்தியாவின் வளர்ச்சியை அதன் பொருளாதார வலிமையால் மட்டுமல்ல, அதன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தாலும் சமூக நீதியாலும் அளவிட வேண்டும். அந்த இலக்கை நோக்கி அரசியல் உறுதியுடன் பயணிப்பதும், அரசின் செயல்பாடுகளைக் குடிமைச் சமூகம் தொடர்ந்து மதிப்பிடுவதும் அவசியம். அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!
கட்டுரையாளர்

