மிஷேல் ஃபூக்கோ நூற்றாண்டு (1926-2026): குடிமைச் சமூக அமைப்புகளும் பாஜக எதிர்ப்புப் போராட்டங்களும்

Published On:

| By டி.ரவிக்குமார்

Foucault- Voices of Protest
  • ரவிக்குமார்

1926 ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் பிறந்த மிஷேல் ஃபூக்கோவின் நூற்றாண்டு இன்று (அக்டோபர் 15) துவங்குகிறது. அதிகாரத்தின் நுட்பங்களை ஆழமாக ஆராய்ந்த அவரது கருத்தாக்கங்கள் நமது சமகால இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள உதவக்கூடியவை.

ஒன்றிய பாஜக அரசின் அதிகாரத்துவ நடவடிக்கைகளை எதிர்ப்பதில் குடிமைச் சமூக அமைப்புகள் (Civil Society) முன்னணியில் நிற்கின்றன. கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டபோதிலும் அவை அஞ்சாமல் தொடர்ந்து மோடி அரசை எதிர்த்து வருகின்றன.

ADVERTISEMENT

குடிமைச் சமூகம் (Civil society) என்ற கருத்தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு மிஷேல் ஃபூக்கோவின் அரசியல் சிந்தனைகள் மிகவும் உதவியாக உள்ளன . குறிப்பாக, இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகள் முன்னெடுத்துவரும் போராட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு ஃபூக்கோவின் பார்வை ஒரு புதிய திறப்பை வழங்குகிறது. அரசு என்பது சட்டங்களாலும் நிறுவனங்களாலும் மட்டுமே அதிகாரத்தைச் செலுத்துவதில்லை; சமூக உறவுகள், பொருளாதார நலன்கள், அறிவு உற்பத்தி, தகவல் பரவல் ஆகியவற்றின் வழியாகவும் அதிகாரம் செயல்படுகிறது. இந்த அதிகார உறவுகளை எதிர்கொள்வதற்கான களமாகவே குடிமைச் சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

1978-79ஆம் ஆண்டுகளில் பிரான்சின் புகழ்பெற்ற காலேஜ் து ஃபிரான்சில் (Collège de France) நிகழ்த்திய விரிவுரைகளில், ஃபூக்கோ குடிமைச் சமூகத்தின் வரலாற்றையும் அரசுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவையும் விரிவாக ஆராய்ந்தார். ஜான் லாக்கின் காலத்தில் குடிமைச் சமூகமும் அரசியல் சமூகமும் ஏறத்தாழ ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆடம் ஃபெர்குசன் போன்ற சிந்தனையாளர்களின் வழியாகக் குடிமைச் சமூகம் புதிய பொருளைப் பெற்றது. அரசு அல்லது சட்ட அமைப்பால் உருவாக்கப்படும் சமூகமாக அல்லாமல், மனிதர்களுக்கிடையிலான இயல்பான உறவுகள், பரஸ்பர அக்கறை, ஒத்துழைப்பு, முரண்பாடுகள் ஆகியவற்றின் வழியாகத் தொடர்ந்து உருவாகும் சமூகமாக அது புரிந்துகொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ஃபூக்கோ எடுத்துரைக்கும் ஃபெர்குசனின் கருத்தில், குடிமைச் சமூகத்துக்கு நான்கு முக்கியப் பண்புகள் உள்ளன. அது மனித வாழ்வின் வரலாற்று இயல்பான அடிப்படை; தனிமனிதர்களைத் தன்னியல்பாக இணைக்கும் சமூக உறவுகளின் தொகுப்பு; அரசியல் அதிகாரம் உருவாகும் களம்; வரலாற்று மாற்றங்களை இயக்கும் சக்தி. இந்த நான்கு பண்புகளும் இன்றைய இந்தியச் சூழலைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படுகின்றன.

குடிமைச் சமூகம் என்பது தேர்தல்களில் வாக்களிக்கும் குடிமக்களின் கூட்டுத்தொகை மட்டுமல்ல. தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், சிறுபான்மையினர் அமைப்புகள், தலித் இயக்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், சுதந்திரமான ஊடகங்கள் எனப் பல்வேறு சமூக சக்திகள் இணைந்து இயங்கும் பரந்த வெளியாகும். இவை அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மாறுபட்ட நலன்களும் கருத்துகளும் கொண்டவர்கள், பொதுவான அநீதிக்கு எதிராக ஒன்றிணைவதே குடிமைச் சமூகத்தின் தனித்துவமாகும்.

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய நீண்டகாலப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கங்கள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், கருத்துச் சுதந்திரத்தையும் அரசமைப்புச் சட்ட உரிமைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆகியவை அரசியல் கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட சமூக எதிர்ப்பின் வடிவங்களாகும். இவற்றின் வழியாக வெவ்வேறு சமூகப் பிரிவுகள் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தாண்டிப் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைகின்றன.

ஃபூக்கோவின் சிந்தனையில் முக்கியமானது, குடிமைச் சமூகம் அரசுக்கு வெளியே இருக்கும் ஓர் அமைப்பு மட்டுமல்ல என்பதாகும். அரசியல் அதிகாரம் சமூகத்தின் உள்ளேயே உருவாகிறது; அதே நேரத்தில், அந்த அதிகாரத்தை எதிர்க்கும் ஆற்றலும் சமூகத்துக்குள்ளேயே உருவாகிறது. அரசின் அதிகாரம் சட்டங்கள், நிர்வாகம், காவல் அமைப்பு ஆகியவற்றின் வழியாக மட்டுமல்லாமல், எது தேசிய நலன், எது தேசவிரோதம், எது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து, எது ஆபத்தான கருத்து என்பதை வரையறுப்பதன் வழியாகவும் செயல்படுகிறது. இதனால் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதுடன், அவற்றைச் சமூகத்தின் பார்வையில் நம்பகத்தன்மையற்றவையாக மாற்றுவதற்கும் முயற்சிகள் நடைபெறலாம்.

இத்தகைய சூழலில் குடிமைச் சமூகத்தின் போராட்டம் என்பது அரசின் சில கொள்கைகளை எதிர்ப்பது மட்டுமல்ல. உண்மையை வரையறுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும், குடிமக்களின் உரிமைகளைத் தீர்மானிப்பது யார், அரசின் முடிவுகளை விமர்சிக்கும் உரிமை யாருக்கு உண்டு என்பன போன்ற அடிப்படையான அரசியல் கேள்விகளையும் அது எழுப்புகிறது. அரசு முன்வைக்கும் கருத்துகளுக்கு மாற்றாகச் சுயாதீனமான அறிவையும் தகவல்களையும் உருவாக்குவது, பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவது, அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை வலியுறுத்துவது ஆகியவை அதிகாரத்தை எதிர்கொள்ளும் முக்கியமான வழிமுறைகளாகின்றன.

அதேநேரத்தில், குடிமைச் சமூக அமைப்புகள் யாவும் இயல்பாகவே ஜனநாயகத்தன்மை கொண்டதாகக் கருதிவிட முடியாது என்பதையும் ஃபூக்கோவின் பகுப்பாய்வு உணர்த்துகிறது. சமூக உறவுகள் ஒத்துழைப்பை உருவாக்குவதைப் போலவே, ஒடுக்குமுறையையும் உருவாக்கலாம். சாதிய ஆதிக்கம், மதப் பெரும்பான்மைவாதம், பாலினப் பாகுபாடு, பொருளாதாரச் சுரண்டல் ஆகியவை சமூகத்துக்குள்ளேயே வேரூன்றியிருக்கின்றன. எனவே, அரசின் அதிகாரத்தை எதிர்ப்பதுடன் சமூகத்துக்குள் செயல்படும் அதிகார உறவுகளையும் குடிமைச் சமூக அமைப்புகள் விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டும். இல்லையெனில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் இயக்கங்கள்கூட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் குரல்களைப் புறக்கணித்துவிடக்கூடும்.

ஃபெர்குசனின் சிந்தனையை ஃபூக்கோ எடுத்துரைக்கும் இடத்தில் மற்றொரு முக்கியமான கருத்து வெளிப்படுகிறது. மனிதர்களை ஒன்றிணைக்கும் சமூக உறவுகள் பொருளாதார நலன்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. பிறரது துயரத்தின் மீதான அக்கறை, நீதி உணர்வு, ஒடுக்குமுறைக்கு எதிரான வெறுப்பு, பொதுநலன் மீதான பொறுப்பு ஆகியவையும் மனிதர்களை ஒன்றிணைக்கின்றன. ஆனால் பொருளாதாரச் சுயநலமும் அதிகாரத்தின் மீதான பேராசையும் இந்த உறவுகளைச் சிதைக்கக்கூடும். இன்றைய இந்தியாவில் மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் அரசியலை எதிர்கொள்ளும்போது, இந்தக் கருத்து சிறப்பான பொருளைப் பெறுகிறது.

குடிமைச் சமூகம் வரலாற்றை மாற்றும் சக்தி என்பதே ஃபூக்கோவின் விவாதத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம். அரசியல் மாற்றங்கள் ஆட்சியாளர்களின் முடிவுகளால் மட்டுமே உருவாவதில்லை. சமூகத்தில் உருவாகும் புதிய உறவுகள், கூட்டுப் போராட்டங்கள், மாற்றுக் கருத்துகள், பொதுமக்களின் அரசியல் விழிப்புணர்வு ஆகியவையும் வரலாற்றின் திசையை மாற்றுகின்றன. ஒரு போராட்டம் உடனடியாக வெற்றி பெறாவிட்டாலும், அது உருவாக்கும் விழிப்புணர்வும் புதிய ஒற்றுமைகளும் எதிர்கால அரசியலை மாற்றக்கூடும்.

இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நெருக்கடியான தருணத்தில் ஃபூக்கோவின் சிந்தனை நமக்கு வழங்கும் முக்கியமான பாடம் இதுதான்: அதிகாரத்தை எதிர்ப்பதற்கான ஆற்றல் அரசியல் கட்சிகளிடமோ தேர்தல் அமைப்புகளிடமோ மட்டும் குவிந்திருக்கவில்லை. சமூகத்தின் பல்வேறு தளங்களில் உருவாகும் உறவுகளிலும் ஒத்துழைப்பிலும் எதிர்ப்பிலும் அது இருக்கிறது. அந்த ஆற்றலை ஜனநாயக உரிமைகள், சமூக நீதி, மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதே இன்றைய அவசியம்.

குடிமைச் சமூகம் அரசின் துணை அமைப்பாக மாறிவிடாமல், அரசின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் சுதந்திரமான வெளியாகத் திகழ வேண்டும். அதேவேளையில், தன்னுள்ளேயே நிலவும் ஆதிக்க உறவுகளையும் அது எதிர்கொள்ள வேண்டும். இன்று பாஜக அரசை எதிர்த்துப் போராடும் குடிமைச் சமூக அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது.

(கட்டுரையாளர் மிஷேல் ஃபூக்கோவின் எழுத்துகளைத் தமிழாக்கம் செய்து தண்டனைச் சமூகம் என்ற நூலை வெளியிட்டுள்ளார்)

Photo of author
டி.ரவிக்குமார்

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share