– டெல்லியில் போலீசாரின் தடுப்புகளைத் தாண்டி இளம் பெண் ஒருவர் ஓடுகிறார். அவரைப் பிடிப்பதற்காகப் போலீசார் துரத்துகின்றனர்..
– இன்னொரு இடத்தில் 20 வயது மாணவி கையில் SFI கொடியுடன் போலீசார் தடைகளை உடைத்து ஓடுகிறார்..
– மற்றொரு இடத்தில் வெள்ளை நிற உடையணிந்த இளம் பெண் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் நின்று உரத்து முழக்கமிடுகிறார்.
இந்த 3 பெண்களும் யார்? இந்தியாவின் தலைநகரில் போலீசாரின் தடுப்புகளைத் தாண்டி ஓட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன் வந்தது? இவர்களை தேசம் உற்றுப் பார்ப்பது ஏன்?
டெல்லி போராட்ட களம்
முதலில் டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளான எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கிறது.
ஆனால் தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.
டெல்லியின் பேலா எஸ்டேட் குடியிருப்பில் 909 வாக்காளர்களில் 908 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. ஒரு குடியிருப்பில் கிட்டத்தட்ட அனைவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் ஒரு குடிமகன் எப்படி வாக்களிப்பார்?
இந்தக் கேள்விகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற முழக்கமும் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.
அக்டோபர் 10-ந் தேதி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்டப் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி என்ற இளைஞர் இயக்கம் அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே டெல்லியின் பல பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர்.
மெட்ரோ நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்திற்குச் சென்றவர்களைப் போலீசார் பல இடங்களில் தடுத்து வைத்தனர்.
அக்டோபர் 10, 11 ஆகிய 2 நாட்களில் மட்டும் 7,500-க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற ஜந்தர் மந்தரில்கூட போராட்டம் நடத்த முடியாத நிலை உருவானது.
அக்டோபர் 12-ந் தேதி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இந்தப் போராட்டங்களின் நடுவில்தான் 3 இளம் பெண்களின் முகங்கள் தேசம் முழுவதும் கவனம் பெற்றுள்ளன.






நேஹா போரா…
போலீசார் தடைகளை உடைக்க பேரிகார்ட் தடுப்புகளின் மீது அசால்ட்டாக ஏறி முழக்கமிட்டவர்
டெல்லி போலீசார் பொறி வைத்து பிடிப்பதை போல காத்திருந்த தருணத்தில் அவர்களது கண்ணில் மண்ணை தூவிவிட்டு போராட்ட களத்துக்கு கறுப்பு டீ சர்ட்டுடன் ஓடி வந்தவர்..
பிரியங்கா காந்திக்கு சமமாக நிற்க வைக்கப்பட்டு மேடைகளில் முழக்கமிட்டவர்
இந்த இளம் பெண்ணின் தோள்களில் கை பிடித்தவாறுதான் உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாகப் போனார் ராகுல் காந்தி..
அந்த இளம்பெண்ணின் பெயர்தான் நேஹா போரா.. டெல்லி போலீசாருக்கு ஆகப் பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கும் இளம் பெண்.
உத்தராகண்ட் மாநிலம் காதிமாவில் பிறந்தவர் நேஹா போரா. வயது 29. இவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தையின் பணியிட மாற்றங்களால் சிறுவயதிலேயே பல்வேறு மாநிலங்களில் வசித்தவர் நேஹா.
இப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் நிகழ்த்துகலை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். நேஹாவின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது வீதி நாடகங்கள்தான்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது சமூகப் பிரச்சி னைகளைப் பேசும் நாடகங்களில் நடித்தார். நாடக மேடைகளில் கேட்ட கேள்விகளை நிஜ வாழ்க்கையிலும் கேட்கத் தொடங்கினார்.
2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அவரை அரசியல் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தன. ஆனால் அந்த அரசியல் பயணத்திற்காக நேஹா கொடுத்த விலை மிகப் பெரியது. இடதுசாரி இயக்கத்தில் – ‘ஐசா’ எனப்படுகிற அகில இந்திய மாணவர் சங்கத்தில் (All India Students’ Association – AISA) இணைந்த நேஹாவின் அரசியல் நிலைப்பாட்டை அவரது தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த அமைப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை, அதாவது CPI(ML) Liberation கட்சியின் மாணவர் அமைப்பு.


தந்தையுடன் 10 ஆண்டுகளாகப் பேச முடியாத மகள்
கடந்த 10 ஆண்டுகளாகத் தந்தையும் மகளும் பேசுவதில்லை. அந்த இடைவெளியை உருவாக்கியது சொத்துத் தகராறோ குடும்பச் சண்டையோ அல்ல. அரசியல் கருத்து வேறுபாடு. ஆனால் அந்தக் கருத்து வேறுபாட்டிற்காக நேஹா தனது அரசியல் நம்பிக்கைகளைக் கைவிடவில்லை.
மாணவர்களின் கல்வி உரிமைகளுக்காக 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் முடிந்த பிறகும் அவரால் வழக்கம்போல உணவு சாப்பிட முடியவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அந்தப் போராட்டத்திற்குப் பிறகு நேஹாவின் தாயார் அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். தந்தையிடமிருந்து 10 ஆண்டுகளாக வராத அங்கீகாரம், தாயின் ஒரு தொலைபேசி அழைப்பில் கிடைத்திருக்கிறது.
அந்த நேஹாதான் இப்போது டெல்லியில் போலீசாரின் தடுப்புகளைத் தாண்டி ஓடுகிறார்.
போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை அடைய முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டபோது, நேஹா தனது போராட்ட இடத்தையே மாற்றினார்; டில்லி ஹாட் அருகே திரளுமாறு சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
சிறிது நேரத்தில் அங்கு மாணவர்கள் திரண்டனர். சாலையே தற்காலிகப் போராட்டக் களமாக மாறியது. போலீசார் அங்கு வந்து போராட்டக்காரர்களைத் தடுத்து வைத்தனர்.
மறுநாளும் நேஹா ஓய்ந்துவிடவில்லை.
போலீசார் எங்கு தடுப்பு அமைத்தாலும், வேறொரு இடத்தில் போராட்டத்தைத் தொடங்கும் வியூகத்தை வகுத்தார். போராட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே அறிவிக்காமல், அரை மணி நேரத்திற்கு முன்புதான் தெரிவிப்பார்.
போலீசார் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், நேஹாவைப் போலத் தோற்றமளித்த வேறொரு பெண்ணை அவர்கள் பிடித்துச் சென்ற சம்பவமும் நடந்தது.

ஆனால் நேஹா வேறொரு இடத்தில் போராட்டக்காரர்களுடன் இருந்தார். ஒருகட்டத்தில் தடுப்புகளைத் தாண்டி ஓடிய நேஹாவை போலீசார் துரத்திப் பிடித்துச் சென்றனர். அவரது சிவப்பு நிற டி-ஷர்ட்டில் ஜப்பானிய அனிமே தொடரான ஒன் பீஸ் சின்னம் இடம்பெற்றிருந்தது. உலகின் பல பகுதிகளில் அதிகாரத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களிலும் இந்தச் சின்னம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தந்தையுடன் 10 ஆண்டுகளாகப் பேசாத ஒரு மகள், இன்று டெல்லியில் கோடிக்கணக்கான தேசத்தின் குடிமக்களுக்காக குரல் கொடுக்கிறார். அவரது போராட்டத்தில் தனிப்பட்ட வலியும் இருக்கிறது. அரசியல் உறுதியும் இருக்கிறது.

புழக்கல் பவித்ரா…
நேஹா போராவைப் போல இன்னொரு 20 வயது இளம் பெண் பெயர் புழக்கல் பவித்ரா..
சுற்றி நிற்கும் போலீசாருக்கு நடுவே ஏதோ ஓட்ட பந்தய களத்தில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு உற்சாகமாக ஓடும் வீராங்கனை போல தான் நேசிக்கும் SFI கொடியுடன் அத்தனை மகிழ்ச்சியோடு போராட்ட களத்தை நோக்கி ஓடிய இளம் பெண் புழக்கல் பவித்ரா.. இன்று யார் இந்த பவித்ரா? என உள்ளூர் முதல் உலகம் வரையிலான ஊடகங்கள் அலசிக் கொண்டிருக்கிறது.
புழக்கல் பவித்ரா..
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்கராவைச் சேர்ந்தவர். வயது 20.
டெல்லி ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் மானுடவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பவித்ராவின் தந்தை பிரகாஷ் உயிருடன் இல்லை.
அவரது தாயார் கே.சி. பிந்து, மங்கரா கூட்டுறவு வங்கியில் கணக்காளராகப் பணியாற்றுகிறார். பவித்ராவின் தாத்தா கே.வி.சந்திரன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டவர். ஊராட்சித் தலைவராகவும் இருந்தவர்.
ஒரு காலத்தில் பாலக்காட்டின் கிராமங்களில் அவரது தாத்தா ஏந்திய செங்கொடி, இப்போது டெல்லியின் வீதிகளில் பேத்தியின் கையில் இருக்கிறது. ஆனால் அந்தச் செங்கொடி படம், ஏதோ போட்டோ சூட் அல்ல.
அக்டோபர் 10-ந் தேதி டெல்லியில் போராட்டத்தில் பங்கேற்கப் பவித்ராவும் மற்ற மாணவர்களும் சென்றனர். ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்ல முயன்ற மாணவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். சிலரைப் போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். பவித்ராவும் தடுத்து வைக்கப்பட்டார்.
போலீஸ் வாகனத்தில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். அதனால் வாகனம் நின்றபோது மற்ற மாணவர்களுடன் வெளியே ஓடி வந்தார் பவித்ரா.
போலீசார் நெருங்கியபோது மாணவர்கள் ஓடிய மற்றொரு தருணத்தில், பவித்ராவின் கையில் எஸ்.எஃப்.ஐ. கொடி இருந்தது. டெல்லி ஆகாஷ்வாணி பவன் அருகே எடுக்கப்பட்ட அந்தக் காட்சிதான் வைரல் போட்டோவாக பரவியது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?
தான் ஓடும்போது கையில் கொடி இருப்பதைக்கூட உணரவில்லை என்கிறார் பவித்ரா.. அத்தனை நேசத்துடன் போராட்ட களத்தை நோக்கி ஓடி இருக்கிறார்.
அக்டோபர் 10-ந் தேதி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்ட பின்னரும் அடுத்த நாள் மீண்டும் போராட்டத்திற்குச் சென்றார்.
அக்டோபர் 11-ந் தேதி மாலை 6.30 மணிக்குப் பெண்கள் பேரணி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மாலை 6 மணிக்கே போலீசார் போராட்டக்காரர்களைத் தடுத்து வைக்கத் தொடங்கினர். பேரணி தொடங்குவதற்கு முன்பே குறைந்தது 25 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் பவித்ராவும் ஒருவர்.
சமூக வலைதளங்களில் பலரும் பவித்ராவின் ஒற்றை படத்தைப் பகிர்ந்தனர். அதே நேரத்தில் பவித்ராவுக்கு எதிராக விமர்சனங்களும் அவதூறுகளும் பரவத் தொடங்கின.
இந்த வைரல் போட்டோவும் தன்னை பற்றிய செய்திகளும் மேலும் மேலும் போராடத் தூண்டுவதாகச் சொல்கிறார் இளம் போராளி புழக்கல் பவித்ரா.
பவித்ராவிடம் ஏன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டபோது, வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்கிறார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் கூறுகிறார்.
தந்தையை இழந்த ஒரு குடும்பத்திலிருந்து டெல்லிக்குப் படிக்க வந்த மாணவி, தனது 20 வயதில் இந்த நாட்டின் குடிமக்களின் அரசியல் உரிமைகளுக்காக வீதியில் நிற்கிறார்!



ஜன்னத் பிஷ்னோய்…
அக்டோபர் 12-ந் தேதி டெல்லியில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அதில் வெள்ளை நிற உடையில் ராகுல் காந்தியுடன் நின்று முழக்கமிட்ட இளம் பெண் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
அவர்தான் ஜன்னத் பிஷ்னோய்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம் சங்கரியா பகுதியைச் சேர்ந்தவர். தந்தை விவசாயி. தாயார் இல்லத்தரசி. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஷியாமா பிரசாத் முகர்ஜி கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விவசாயக் குடும்பத்திலிருந்து டெல்லிக்குப் படிக்க வந்த ஜன்னத், கல்லூரியில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்த்தார்.
குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு..
- கல்லூரிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வேண்டும்.
- மாணவிகளுக்கெனத் தனிப் போலீஸ் உதவி மையங்கள் வேண்டும்.
இப்படிப் பல கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கத்தில் இணைந்தார். மாணவர் சங்கத் தேர்தல்களில் போட்டியிட்டார். அதன்பிறகு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரானார்.
104 ஆண்டுகால பல்கலைக்கழக வரலாற்றில் அந்தப் பதவிக்கு வந்த முதல் பெண் ஜன்னத்.
டெல்லியில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்திலும் ஜன்னத் பங்கேற்றார். அந்தச் சிறுமிக்காக நீதி கேட்டார். பெண்களின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்தார்.
இப்போது வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். அக்டோபர் 12-ந் தேதி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் ஒரே வாகனத்தில் நின்று ஜன்னத் முழக்கமிட்ட காட்சிகள் நாடு முழுவதும் பரவின.
ஒரு விவசாயியின் மகள், டெல்லி பல்கலைக்கழக மாணவர் அரசியலில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியிருந்தார்.
-ஒரு போராட்டத்தைத் தடுக்கப் போலீசார் தடுப்புகளை அமைக்கலாம்
-ஒரு பேரணி செல்லும் பாதையை மாற்றலாம்
-நேஹா போராவைப் போலீசார் பிடித்துச் சென்றிருக்கலாம்
-பவித்ராவை போலீஸ் வாகனத்தில் ஏற்றியிருக்கலாம்
-ஜன்னத் பிஷ்னோய் பங்கேற்ற பேரணிக்கு முன்னால் தடுப்புகளை அமைத்திருக்கலாம்
ஆனால் இந்த இளம் போராளிகள் எழுப்பிய கேள்விகளுக்கான ”விடை கிடைக்காமல்” போனால் ஆயிரமாயிரம் நேஹா போராக்களும் பவித்ராக்களும் ஜன்னத் பிஷ்னோய்களும் சரித்திரத்தில் வந்து கொண்டேதான் இருப்பார்கள்!
