மின்சார வாரியம் தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டுவதா? கம்யூனிஸ்ட்கள் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.35 கொடுத்து, 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க திட்டமிட்டுள்ளதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூபாய் 35 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்யவிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் இவ்வளவு அதிக விலைக்கு எந்த மாநிலமும், எந்த காலத்திலும் கொள்முதல் செய்ததில்லை. தற்போது பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மை. ஆனால், பல வாரங்களாகவே மின்வெட்டு இருப்பதை பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல இயக்கங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் இவற்றையெல்லாம் மறுத்தே வந்திருக்கிறது. மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணக்கிட்டு உரிய காலத்தில் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால், மின்வெட்டை காரணம் காட்டி கொள்ளை விலைக்கு கொள்முதல் செய்வது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும். இந்தியாவில் பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ரூபாய் 2.45 லிருந்து 5.30 வரையே இருக்கிறது. தவிர்க்க முடியாத நிலையில் டீசல் மூலம் உற்பத்தி செய்தால் மட்டுமே அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவை கூட விற்பனைக்கு வருவதில்லை. மாறாக, தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக அதைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், 35 ரூபாய்க்கு கொள்முதல் என்பது நம்ப முடியாததாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை தாராளமாக அள்ளிக் கொடுப்பதுமாகும். ஏற்கனவே, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு என்று கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றுவதற்கு வழிவகுப்பதாகும்.

ADVERTISEMENT

எனவே, தமிழ்நாடு அரசாங்கமும், மின்வாரியமும் அநியாய விலைக்கு கொள்முதல் செய்யப் போட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய
தமிழ்நாடு அரசு முயல வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை எதிர் கொள்ள, தமிழ்நாடு அரசு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.35 கொடுத்து, 4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குவதாக அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு சுமந்து வரும் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் மேலும் ரூ.1 லட்சம் கோடி அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாரம் குறைவான விலையில் வாங்க வாய்ப்பிருக்கும் நிலையில், அதனை தவிர்த்து விட்டு, வெளிச்சந்தைக்கு செல்வது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அரசு தரப்பிலும் எந்த விளக்கமும் வெளிவராத நிலையில் கொள்முதல் நடவடிக்கை மீது சந்தேக நிழல்கள் படிவதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்
எனவே, தமிழ்நாடு அரசு கவனத்துடன் செயல்பட்டு, குறைந்த விலையில் வெளிப்படையான முறையில் மின்சாரத்தை வாங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மின் கட்டண உயர்வால் உழைக்கும் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் மின்கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் திசை வழியில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருவதுடன் , மின் வழித்தடங்களை தனியார்மயமாக்கும் முயற்சியினையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் துறைக்கு மாற்றுவதில் போய் முடியும் என்பதால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதையும், வழித்தடங்களை தனியார் மயமாக்குவதையும் அரசு கைவிட வேண்டும்.

மின்கட்டண உயர்வுகளுக்கும், தட்டுப்பாடுகளுக்கும் முக்கியக் காரணம் ஒன்றிய மாநில அரசுகள் நாட்டின் அதிகரித்துவரும் மின் தேவைக்கேற்ப பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாததாகும்.

உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி மூலத்தனத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு மின்சார சட்டம், 2003 யை பாஐக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

மின்சாரத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்து, ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவது என்ற பெயரில் மின்உற்பத்தி, மின்மாற்றுதல், விநியோகம், தொடரமைப்பு போன்றவற்றை தனித்தனியாக பிரித்து, அதன் வழியாக பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததே இன்றைய அவலங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.
எனவே, இத்தகைய கொள்கையில் மாற்றம் வேண்டும்.பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழ்நாடு அரசு தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும். குறைந்தக் கட்டணத்தில் மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share