1 யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் காரணம் -அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Nirmal Kumar Press Meet

வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் சூழல் உருவாகி உள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “திமுக ஆட்சிக் காலத்தில் பணிகள் சரியாகக் கையாளப்படாததே தற்போதைய மின் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளதற்குக் காரணம். வெயில் அதிகரித்துள்ளதால் தேசிய அளவில் கூட முன்கூட்டியே மின் தேவை அதிகரிக்கும் என்பதை கணிக்க இயலவில்லை. மேலும், தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பிலிருந்து போதிய மின்சாரம் கிடைக்காததால் தனியாரிடமிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக 30 சதவீதம் மின் தேவை அதிகரித்துள்ளதால் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளோம். 3,500 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் விட்டாலும், 1,500 மெகாவாட் மட்டுமே வாங்க இருக்கிறோம். இது குறுகிய கால டெண்டர் மட்டுமே. திமுக ஆட்சி காலத்தில் நீண்ட கால செயல்திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை; இதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம்.

அதிக விலைக்கு வாங்கப்படும் மின்சாரம் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மிக முக்கிய தேவை நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.” என்றார்.

ADVERTISEMENT

அண்டை மாநிலங்களை விட கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழ்நாட்டில் மின் தேவை அதிகமாக உள்ளது. காற்றாலை மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை. என்.எல்.சி.-யிலிருந்து வர வேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை. வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டிற்கு மின் தேவை அதிகரித்து வருகிறது.

மின்சாரத்தை வாங்கவில்லை எனில் பவர் கட் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது; இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்படும்’ என்றார்.

ADVERTISEMENT

மேலும், 3,500 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் வெளியிட்டாலும், 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்கப்படும். மின் தேவை அதிகரிப்பால் தற்போது குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேசமயம் மின்சார கொள்முதலில் எந்தவித குறைபாடோ, தவறோ, முறைகேடோ நடைபெறவில்லை.

தமிழகத்தில் தற்போது அதிக மின்சார தேவை இருக்கும் சூழலில் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் நீண்ட கால ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது பெறப்படும் மின்சாரம் என்பது அக்டோபர் 15 முதல் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படும்.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35-க்கு வாங்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.5 கோடி செலவு ஏற்படுகிறது. திமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்படவில்லை; இதுவும் பிரச்சினைக்குக் காரணம். அதேபோல், அசாமிலிருந்து 430 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்துவிட்டோம்.

திமுக ஆட்சியில் நான்கு முறை மின்சார அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தன் வழக்குகளில்தான் கவனம் செலுத்தினார், தன் துறையை கவனிக்கவில்லை. தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 50 சதவீதமாக இருந்தது, தற்போது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் லெட்டர் பேட் இல்லாத நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளனர்; அதேசமயம் திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share