ரஃபேல் விவகாரம்: மோடியை விமர்சித்த ராகுல் காந்தி… அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

Published On:

| By Mathi

Rahul Gandhi-Narendra Modi-Supreme Court

பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi) விமர்சித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ‘திருடர்களின் தலைவர்’ (Choro Ke Sardar), ‘திருடர்களின் தளபதி’ (Commander-in-Thief) என ராகுல் காந்தி விமர்சித்தார்.

ADVERTISEMENT

இந்தக் கருத்துகள் பிரதமர் மோடியின் நற்பெயரை மட்டுமின்றி பாஜகவின் உறுப்பினர்களின் நற்பெயரையும் பாதித்ததாகக் கூறி, அக்கட்சியின் நிர்வாகி மகேஷ் ஸ்ரீஸ்ரீமால் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்தும், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். தனது விமர்சனத்தில் பாஜகவையோ அதன் உறுப்பினர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்காக பாஜக நிர்வாகி ஒருவர் அவதூறு வழக்குத் தொடர முடியாது என்றும் ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்து மும்பை உயர்நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ராகுல் காந்தியின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

மேலும், அடுத்த 4 வாரங்களுக்கு ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share