அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கொறடா தொடர்ந்த வழக்குகளைப் பகுதியளவில் ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், 6 பேரின் தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கைகளை சபாநாயகர் தொடர்ந்து மேற்கொண்டு, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
2026-ம் ஆண்டு மே 13-ந் தேதி விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தொடங்கிய இந்த விவகாரம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, தவெகவில் இணைதல், கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கைகள், உயர்நீதிமன்ற வழக்குகள் என அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்துள்ளது.
கடந்த 5 மாதங்களில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
மே 13: விஜய் அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மே 13-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது.
2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர், கட்சிக் கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மே 14: சபாநாயகரிடம் அதிமுக மனு
கட்சிக் கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்களையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்படி, கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் 15 நாட்களுக்குள் அந்தச் செயல்பாட்டை சம்பந்தப்பட்ட கட்சி மன்னித்தால் தகுதி நீக்கத்தைத் தவிர்க்க முடியும்.
மே 25: ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். அதே நாளில் 3 பேரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதனால் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
மே 26: இசக்கி சுப்பையாவும் ராஜினாமா
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். பின்னர் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.
இதன் மூலம் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
மே 27–28: 21 பேருக்கு மன்னிப்பு… 4 பேருக்கு இல்லை
விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 21 பேரின் செயல்பாட்டை மன்னிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
ஆனால் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேருக்கும் மன்னிப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அந்த 4 பேர் மீதான தகுதி நீக்க மனு நிலுவையில் இருந்தது.
ஜூன் 15: உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு
4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாக்களை சபாநாயகர் அவசரமாக ஏற்றது அரசியலமைப்புக்கு முரணானது என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கவும் கோரப்பட்டது.
ஜூன் 16: சி.விஜயபாஸ்கர் ராஜினாமா
அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதால் விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஜூன் 17: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
முதல் 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஜூன் 29: எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா
அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதனால் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
ஜூலை 2: தவெகவில் இணைந்த 2 விஜயபாஸ்கர்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதன் மூலம் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 6 ஆனது.
மேலும் ஒரு வழக்கு
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்தும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்தார்.
அரசியலமைப்பின் 190(3)(b) பிரிவின்படி ராஜினாமாக்கள் உண்மையானவையா, சொந்த விருப்பத்தில் அளிக்கப்பட்டவையா என்பதை சபாநாயகர் முறையாக விசாரிக்கவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
ஜூலை 16: 2 விஜயபாஸ்கர்களுக்கும் நோட்டீஸ்
2 விஜயபாஸ்கர்களின் ராஜினாமாவை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் சட்டசபைச் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அக்டோபர் 6: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்
ராஜினாமா காரணமாக காலியான மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தல்களின் சட்டப்பூர்வ நிலை குறித்த கேள்விகளும் ராஜினாமா வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
அக்டோபர் 9: தீர்ப்பு ஒத்திவைப்பு… இடைத்தேர்தலில் தவெக வெற்றி!
6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா வழக்குகளில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி விடுப்பில் இருந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதே நாளில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த 2 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுகவின் பரந்தாமன் 54,008 வாக்குகளும், அதிமுகவின் கனிதா சம்பத் 47,450 வாக்குகளும் பெற்றனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுகவின் சுகன்யா 57,370 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 45,280 வாக்குகளும் பெற்றனர்.
2026 சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தற்போது அதே தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
அக்டோபர் 13: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதே நேரத்தில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த 6 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
