ரூ.5-க்கு உற்பத்தியாகும் 1 யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குகிறது தமிழகத்தில் ஆளும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு என திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக டிஆர்பி ராஜா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தேர்தலுக்கு பின் பதவி ஏற்ற தவெக அரசு 2026 மே 23-ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டி கேள்விக்குள்ளாக்கினார்கள்!
அதே தவெக அரசு 2026 ஜூன் 25ல், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் 2026 அக்டோபர் 12ல், ஒரு யூனிட் ரூ.37 வரை கொடுத்து அவசர கதியில் மின்கொள்முதல்.
திமுக ஆட்சியில் வெறும் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை ஒப்புதல் பெற்ற மின்கொள்முதல் கட்டணங்கள் என்னவாயிற்று? செப்டம்பர் 9-ஆம் தேதியே ஆந்திரா ரூ.16 முதல் ரூ.20 வரை தனக்கான அக்டோபர் மாத தேவைக்கான மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டது. தமிழ்நாடு அரசு ஜோசியம் பார்த்து கடைசி நேரம் வரை காத்திருந்ததா?

திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் இரண்டும் சரியான நேரத்தில் தயாராக இருந்த நிலையிலும், இந்த அரசின் மோசமான திட்டமிடல் காரணத்தால் நிலக்கரி இருப்பு இல்லாமல் போனதால், தற்போது இவ்விரு நிலையங்களும் மிகக் குறைவான திறனில் செயல்படுகின்றன. இவ்விரு நிலையங்களில் வெறும் 5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை எதற்காக 7 மடங்கு அதிக விலை கொடுத்து ரூபாய் 35 முதல் 37 வரை வாங்குகிறது இந்த அரசு?
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை. தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்? மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட முடியுமா? இவ்வாறு டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
