ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய்.. சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் பேச்சு.. பவன் கல்யாண், ஜெகனையும் சந்திப்பாரா? ‘மெர்சல்’ வரவேற்பு ரெடி!

Published On:

| By Mathi

Andhra-Vijay Visit

தமிழக முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு ஒருநாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிடுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த அக்டோபர் 6-ந் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சார்பில் விஜயவாடா எம்.பி. கேசினேனி சிவநாத், நரசராவ்பேட்டை எம்.பி. லாவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு, ஓங்கோல் எம்.பி. மாகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, அமலாபுரம் எம்.பி. ஹரீஷ் பாலயோகி ஆகியோர் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து, விஜயவாடா உத்ஸவ் 2.0 விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று ஆந்திராவுக்கு முதல்வர் விஜய் இன்று அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் ஆந்திரா மாநிலத்துக்கு முதல் முறையாக இன்று செல்கிறார் விஜய். இன்று பிற்பகல் 3 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் விஜயவாடா செல்கிறார்.

மாலை 4 மணிக்கு விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்தைச் சென்றடையும் விஜய்க்கு அங்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சாலை வழியாக கனகதுர்கா அம்மன் கோயிலுக்குச் செல்கிறார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார். விஜயவாடா அருகே கிருஷ்ணா நதிக்கரையில் உண்டவல்லி பகுதியில் அமைந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில், இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழக முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தச் சந்திப்பில் கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம், தமிழகத்துக்குக் கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிடுவது ஆகிய 2 விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. நீர்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நீர்வளத்துறைச் செயலாளர் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

ADVERTISEMENT

தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆண்டுதோறும் ஆந்திரா 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீர் வழங்க வேண்டும். ஆனால் அக்டோபர் 9-ந் தேதி வரை தமிழகத்துக்கு 2.251 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடுமாறு சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரவு 7.10 மணி முதல் 8 மணி வரை விஜயவாடா புன்னமி படித்துறையில் நடைபெறும் உத்ஸவ் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். இரவு 9 மணிக்கு விஜயவாடாவிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, இரவு 10 மணிக்குச் சென்னை திரும்புகிறார்.

பவன் கல்யாண், ஜெகன் சந்திப்பு நடைபெறுமா?

இதனிடையே ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண், ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரையும் விஜய் சந்தித்து பேசுவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரம்மாண்ட வரவேற்பு ரெடி

விஜய்யின் வருகையை முன்னிட்டு விஜயவாடாவில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தமிழக முதல்வர் விஜய்யும் இணைந்து இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share