வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 14 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் இன்று (அக்டோபர் 12) டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியைத் தொடர்ந்து ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பது, அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடுவது, தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின் அரசியலமைப்புச் சட்ட செல்லுபடித்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அதில் 14 குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, மனுத் தாக்கல் செய்வதற்கான நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர்களில் 9 பேரின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக அனுமதி அளிக்கும் வக்காலத்து ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில ஆவணங்களில் எழுத்துகள் மிகவும் சிறியதாக இருப்பது, 2 ஆவணங்களின் கலர் ஜெராக்ஸ் இணைக்கப்படாதது, சில பக்கங்கள் விடுபட்டிருப்பது, பக்க எண்களில் முரண்பாடுகள் இருப்பது உள்ளிட்ட குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தக் குறைபாடுகளை மனுதாரர்கள் சரிசெய்த பின்னரே வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட முடியும்.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவில் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, SIR விவகாரம் தொடர்பாக நேரில் சந்திக்க நேரம் கேட்ட ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் கோரிக்கையைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் நிராகரித்திருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை முறையாக அணுகலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
